பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/557

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 551 கழகத்தோழர்கள் ஏராளமாக வந்திருந்தனர். உணவு அங்கே அருந்திவிட்டு, இரவு ஒரு மணி அளவில் மழையினூடே மதுரை நோக்கிப் புறப்பட்டோம். விடியற்காலை 4 மணிக்குத் தான் மதுரையை அடைய முடிந்தது. ஒரு சில மணி நேரங்கள் தூக்கம் என்ற பெயரில் கழித்துவிட்டு காலை ஏழுமணிக்கு மதுரையிலிருந்து சாத்தூர் நோக்கிக் கிளம்பினோம். சரியாக பத்து மணிக்கெல்லாம் சாத்தூருக்குள் நுழைந்து விட்டோம். கண்களில் நீர் தாரைதாரையாக வழிந்தோட கழகக் கண்மணிகள் அந்த வீட்டு வாசலில் நின்று கொண் டிருந்தார்கள். என்னைக் கண்டவுடன் கோவெனக் கதறி அழுத குடும்பத்தாரைத் தேற்றிட முடியாமல் நான் தவித் தேன். எனக்கே ஆறுதல் சொல்ல அங்கே ஆட்கள் தேவைப் பட்டது. நான் இறுதி அஞ்சலி செலுத்தியவுடன் அந்தத் தியாகச் செம்மலின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. கொளுத்து கின்ற வெயிலில் பல்லாயிரவர் அந்த இறுதி ஊர்வலத்தில் மௌனமாக அணிவகுத்தனர். நானும் அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டு நடந்தே சென்றேன். எரியூட்டப் பெற்ற இடத்தில் அழகுத் தேவர் தலைமையில் இரங்கலுரையாற்றி இறுதி அஞ்சலி செலுத்தினேன். அன்று இரவு 12 மணி அளவில் சென்னை வந்து சேர்ந் தோம். வழி நெடுக எங்கள் காரை நிறுத்துமாறு அன்புக் கட்டளை பிறப்பித்த கழக உடன்பிறப்புக்கள், மாணவர்கள் விவசாயப் பெருங்குடி மக்கள் ஆகியோரைச் சந்தித்து ஓரிரு நிமிடங்கள் உரையாற்றியதின் காரணமாக மனச்சோர்வும், சோகமும் சற்று குறைந்த நிலையில் திரும்பினேன்.