பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 55 நிலப்பிரபுக்களின் ஆதரவாளரான பக்கிரிசாமி என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறை, வழக்கு மன்றமெனச் சென்றிருக்க வேண்டிய நிலப்பிரபுக்கள் சிலர், அதற்கு மாறாகச் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு-காட்டுமிராண்டிகள்கூடச் செய்திடக் கூசும் காரியத்தைச் செய்தனர். கத்தி, கட்டாரி, வேல்கம்புகளுடன் கீழ்வெண்மணி ஆதி திராவிடர் காலனிக்குள் படையெடுத்தனர். பயந்தோடிய பலர் ஒரு வீட்டுக்குள் புகுந்து கதவைத் தாளிட்டுக் கொண்டனர். இரக்கமற்றோர் எல்லா வீடுகளுக்கும் தீ வைக்கவே, ஓடி ஒளிந்திருந்தோர்க்கு அடைக்கலம் தந்த அந்தக் குடிசையும் நெருப்புக்கு இரையானது. 1968 டிசம்பர் 25- ஆம் நாள் தமிழக வரலாற்றில் ஒரு பெருங் களங்கத்தை ஏற்படுத்திய அந்த அநாகரீக - அராஜகச் செயல் கேட்டு, அண்ணா துடித்துப் போனார், உணவு அருந்தவே மறுத்து விட்டார். உறக்கமே கொள்ளவில்லை. உடல்நிலை வேறு கெட்டிருந்த சமயம். உடனடியாக என்னைக் கீழ் வெண்மணிக்குச் சென்று நிலைமையை அறிந்து வரக் கட்டளை யிட்டார். நான், அமைச்சர்கள் சத்தியவாணிமுத்து, மாதவன் ஆகியோர் தஞ்சை மாவட்டத்தில் நாகைக்கு அருகேயுள்ள கீழ்வெண்மணிக்கு விரைந்தோம். விவசாயத் தொழிலாளர் வர்க்கத்தின் பக்கம் எப்போதுமே குரல் கொடுக்கும் மன்னை நாராயணசாமி அவர்களும், கம்யூனிஸ்டு கட்சியின் தஞ்சை மாவட்டத் தலைவர்களும் எங்களுடன் அந்தக் கிராமத்திற்கு வந்தனர். எரிந்துபோன காலனியைக் கண்டு கண்ணீர் சிந்தினேன் நாற்பத்து இரண்டு உயிர்களைப் பலி கொண்ட அந்த இடத்தைப் பார்த்துக் கதறினேன். தாய்க்குலத்தினரையும் தளிர்களையும் உழைக்கும் கூட்டத்தையும் இப்படி உயிரோடு வைத்துக் கொளுத்திச் சாம்பல் மேடாக்க எப்படித்தான் அந்த நாச காரர்கள் துணிந்தார்களோ என்று அந்த வட்டாரமே புலம்பி அழுதது. அந்தக் கொடுஞ் செயலர் கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர் கோபாலகிருஷ்ண நாயுடு என்பவர்! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர்! சட்டப்படி நடவடிக்கைகளைப் பாரபட்சமின்றி எடுத்திடு மாறு காவல்துறையினருக்கு முதலமைச்சர் அண்ணா அவர்கள்