பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்


எங்களுக்குத் தெரிந்தது இவ்வளவு. இந்த பூமி மனிதனுக்குச் சேர்ந்ததல்ல. மனிதன், பூமியினால் தோன்றியவன். இதை நாங்கள் அறிந்துள்ளோம். ஒரே குடும்பத்திற்குச் சேர்ந்தவர்களில் இரத்த சம்பந்தம் இருப்பதைப் போன்றே பூமியின் மேலிருக்கும் எல்லா உயிர்ப் பிராணிகளினிடையிலும் சம்பந்தமுள்ளது. மனிதன் தன்னுடைய உயிர் வாழ்வை நியமனம் செய்து கொண்டவனல்ல. வாழ்வின் ஒரு சிறு அம்சம் மட்டும் தான் மனிதன். அவன் வாழ்க்கையில் எதை எதைச் செய்கிறானோ அதைத் தனக்காகவே செய்து கொள்கிறான்.

தெய்வத்தோடு பேசுவேன், அவரோடு நட்புறவு பூண்டுள்ளேன் என்று பேசிக் கொண்டிருக்கிற வெள்ளை மனிதன் கூட மற்ற எங்களைப் போன்ற எல்லா மனிதர்களோடும் ஒன்றிப் புரிந்து கொண்டு வாழவேண்டும். அவனுக்குத் தனிப்பட்ட மேலாண்மை எதுவும் கிடையாது. எல்லா மனிதர்களும், சகோதரர்கள் என்பது எங்களுக்கும் புரிந்துள்ளது. நம்முடைய தெய்வம், எல்லாருடைய தெய்வமுமாகும். இந்த உண்மையை வெள்ளை மனிதன் எப்போதாவது ஒரு நாள் புரிந்து கொண்டே தீர வேண்டும்.