கவிஞர் வெள்ளியங்காட்டான்
xi
மனிதத்தை மாண்புறச் செய்தல்
அறிவுப் புலத்தில் எத்தனையோ ஒளிச்சுடர்கள் எழுந்து ஒளிவீசியுள்ளதை வரலாற்றில் காண்கிறோம். ஆனால் அச்சுடர்கள் வீசிய ஒளியை மனித சமூகம் பயன்படுத்திக் கொண்டதா என்பதுதான் கவலையோடு நம் நெஞ்சில் எழும் கேள்வி.
கடந்த நூற்றாண்டில் இக்கொங்கு மண்ணில், தன்மானத்தோடும் தமிழ் நேயத்தோடும் வாழ்வியல் செம்மையோடும் வாழ்ந்து, அரிய சிந்தனைகளைப் பாடல்களாகவும் உரைநடையாகவும் எழுதிக் குவித்த ஒரு மாபெரும் தமிழ் மகன் கவிஞர் வெள்ளியங்காட்டான், எத்துணை தமிழரால் அறியப்பட்டிருந்தார் என்பதுதான் நம்மை வருத்தமுறச்செய்யும் வினாவாகும்.
ஒருதொழிலாளியாக அவர் வாழ்ந்தார். படிப்பாளியாகவும் சிந்தனையாளராகவும் படைப்பாளியாகவும் அவர் திகழ்ந்தார். “அறம் செயும் வகை” அறிந்திருந்த அவருக்குப் ‘பொருள் செயல் வகை’ தான் புலப்படாததாய் இருந்தது. பொருளை நேசித்த மக்களுக்கு, அருள் நேயராகவும் அறநேயராகவும் அறிவு நேயராகவும் வாழ்ந்த ஒருவரை அடையாளங் காண இயலவில்லை!