பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் வெள்ளியங்காட்டான்

xiii

மோதிலால் நேரு; சிறுமி ஒருத்தியின் சொல்லுக்கும் உயர்ந்த மதிப்பளித்த குடியரசுத் தலைவர் ஆப்ரஹாம் லிங்கன்; கடைநிலைப் பணியாளரின் கடமையைத் தான் ஏற்றுச் செய்த நகர மேயர்; பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைந்த புத்த பெருமான்; உணவு அரைக்கும் கல் இரத்தினக் கல்லிலும் உயர்ந்தது என்பதை அசோகனுக்கு உணர்த்திய புத்தத் துறவி; மனித உயிர்களின் மதிப்பு அறியாத மன்னனுக்கு மனிதம் இது என்பதை உணர்த்திய கவிஞர் அகமது: பொய்யன் கோய பெல்சையும் வாயடக்கிய வாய்ச் சொற்கள்; பால்வடியும் மழலை உள்ளமே தடம் மாறும் போது கொலையிற் கொடிய கெடு மனமாய் ஆவதைக் காட்டும் ஓவியர்; மாற்றாரை மாய்த்துச் சூடும் வாகை நிலையற்றதே என்பதை உணரச் செய்த ஞாயவான் சோலோன்; மண்ணையும் இயற்கையையும் மண்ணின் மைந்தரையும் அழித்துப் படைத்தது நாகரிகம் ஆகாது என்பதை எடுத்துரைக்கும் அமெரிக்கப் பழங்குடி" இவர்கள் யாவரும் நம் மனத்தைவிட்டு நீங்க மறுப்பதே இந்த நூலின் பெருமைக்குக் கூறும் கட்டியமாகும்.

மனிதத்தை மாண்புறச் செய்யும் இந்நூலை அழகாக அச்சிட்டளித்த நந்தினி அச்சகம் திரு.வேனில் அவர்களும் அச்சகப் பணியாளர்களும் நம் பாராட்டுக்குரியவர்கள். இந்நூலை அரிதின் முயன்று வெளியிடும் கவிஞரின் பேத்தி சிவா சித்ரா அவர்கள் நம் போற்றுதலுக்குரியவர்.

இரணியன்