பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்


இந்நிலையில் நிலத்தில் விளையும் கிழங்கு, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை ‘கொரில்லா’ என்ற ஒருவகைக் குரங்குகள் நாசப்படுத்தித் தொல்லை கொடுத்தன. தன்னந்தனியனான அவ்வாலிபன் தாயற்ற தன் அருமைக் குழந்தையைப் பாதுகாக்கவும், உழைத்துப் பயிரிட்ட உணவைக் கொரில்லாக்களிடமிருந்து காக்கவும் இடைவிடாமல் போராடித் துன்புற வேண்டியிருந்தது.

ஒருநாள் குழந்தை தூங்கும் நேரம். கூப்பிடு தூரத்தில் நிலத்தைப் பண்படுத்தும் வேலையைச் செய்து கொண்டிருந்தான். அப்பொழுது குழந்தையின் அழுகுரல் கேட்டதும் வீட்டை நோக்கி விரைந்தான். ஆனால், அவன் சற்றுத் தொலைவில் வரும்போதே, பெண் கொரில்லா ஒன்று தன் குட்டிகளோடு குடிசைக்குள் நுழைந்து கொண்டிருந்ததைப் பார்த்து ஸ்தம்பித்து நின்று விட்டான். தன் குழந்தையின் கதி என்னவாகுமோ என அவன் மனம் பதறிற்று. தன் தோளிலிருந்த வில்லை எடுத்து நாண் ஏற்றியவாறு பீதியோடு அடிமேல் அடிவைத்து குடிசைக்கு அருகில் வந்தபோது குழந்தையின் அழுகையும் நின்றிருந்தது.