பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்


அப்போது, குடிசையின் உள்ளே அவன் கண்ட காட்சி, அவனை மெய்சிலிர்க்க வைத்தது. என்ன ஆச்சர்யம்! தாய் கொரில்லா அவன் குழந்தையை மார்போடு அணைத்துப் பாலூட்டிக் கொண்டிருந்தது, குட்டிகள் தொட்டிலைச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தன. இந்த அற்புதமான நம்ப முடியாத காட்சி அவனைச் சிலையாக்கியது.

பாலூட்டி முடித்த கொரில்லா குழந்தையை மீண்டும் முன்பிருந்தது போல் தொட்டிலிலிட்டுத் தன் குட்டிகளோடு வெளியேறியது. படபடக்கும் உள்ளத்தோடு குழந்தையைத் தூக்கி பால் வடியும் இதழ்களில் கண்ணீரோடு முத்தமிட்டான்.

அன்றுமட்டுமல்ல குழந்தை அழும் ஒவ்வொரு நாளும் அவன் இல்லாதபோது வந்து பாலூட்டிச் சென்றது. சில மாதங்களுக்குப் பிறகு மெல்ல மெல்ல அதன் வருகை நின்றுவிட்டது.

மனிதனாய்ப் பிறந்து விலங்காய் வாழும் உலகில், விலங்காய்ப் பிறந்து மனிதத் தன்மை என்னும் கருணையைக் காட்டிய கொரில்லாவை நாம் நம் வாழ்வில் மறக்க முடியுமா?