பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்

வீணாகிறது. மேயரிடம் சொல்லவில்லையானால், நீ இன்னும் கூட வந்திருக்க மாட்டாயல்லவா?” எனப் பொரிந்து கொண்டிருக்கும் போதே லிப்ட் முதல் மாடியை எட்டியது. வெளியே நின்ற ஓர் உயர் அதிகாரி ‘லிப்டை’ திறந்து மேயரைப் பார்த்து “ஹலோ” மேயர் அவர்களே! எப்படியிருக்கிறீர்கள்?” - என்றவாறு கைகுலுக்கினார். அவருக்குப் பின்னால் நின்ற அப்பெண் இதைப் பார்த்துத் திடுக்கிட்டாள். இவ்வளவு நேரம் தான் வசைபாடியது நகர மேயரைத்தான் என்பதறிந்து வெட்கத்தாலும் அவமானத்தாலும் கூனிக் குறுகிச் செய்வதறியாது நின்றாள்.

மேயர், அப்பெண்ணைப் பார்த்து மென்மையாக “அம்மா உங்களுக்கு ஏற்பட்ட கால தாமதத்திற்கு மன்னிக்கவும். ‘லிப்ட் பாய்’ - வழியில் ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டான். அவனுக்கு உதவ உடனிருந்த அலுவலர்களும் சென்று விட்டனர். ஆதலால்தான் உடனே மாற்று ஏற்பாடு செய்ய இயலவில்லை. மீண்டும் இவ்வாறு தவறு ஏற்படாமல் கவனமாகப் பார்த்துக் கொள்கிறோம்!” எனக் கூறினார்.