பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்

தேவேந்திரனின் கோபம் எல்லையைக் கடந்தது. “இது என்ன தேவர்களின் சபையா? இல்லை? முட்டாள்களின் கூட்டமா? நீங்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? இந்த மனிதன் கொடிய மிருகங்களை எல்லாம் சர்க்கஸில் நடனமாட வைத்துக் கொண்டிருக்கிறான். நீங்கள் என்னவென்றால் அவனுக்கு உயிர் என்றும், பயம் என்றும் அளந்து கொண்டிருக்கிறீர்கள்!” எனப் பொரிந்து தள்ளினான்.

சபையோர் ‘கப்-சிப்’ என மெளனமாயினர்.

தேவேந்திரன் கவலை நியாயமானது தான் எனவும் உணர்ந்தனர். பிறகு ஒரு பண்டிதன் எழுந்து, “தேவேந்திரா, இந்த மனிதனைப் பற்றி நீயே அறியாத இரகசியம் ஒன்றுள்ளது. அவன் எப்போதும் வெளியே உள்ள பொருள்களை மட்டுமே பார்ப்பவன், சிந்திப்பவன், செயல்படுபவன். என்றுமே தனக்குள்ளே என்ன இருக்கிறது என்பதை அவன் பார்க்கவும் மாட்டான், தேடவும் மாட்டான். ஆதலால், நீ எந்த இரகசியத்தை வேண்டுமானாலும் அவனுக்குள் புதைத்து வை, அவன் எக்காலத்திலும் அதைக் கண்டுகொள்ள மாட்டான்” என்றான்.