பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்


கவிஞர் அகமது தமது திடமான குரலில் கூறிய இந்த வார்த்தைகள், அரசனுடைய நெற்றியில் சுத்தியைக் கொண்டு ஓங்கி அடித்தது போல மிகமிகக் கடினமான வலியை ஏற்படுத்தின. எதுவும் சொல்லத் தோன்றாமல் திக்பிரமை பிடித்தவன் போலச் சற்று நேரம் உட்கார்ந்தவாறு இருந்தான். அவனுடைய உள்ளத்தில் அச்சம் படிந்தது போலிருந்தது. உடல் மட்டுமன்றி, கை கால்களும் நடுங்கலுற்றன. உடனடியாக குற்றவாளிகளாக அன்று கொண்டு வந்து அங்கு நிறுத்தப் பட்டிருந்த அனைவரையும் விடுதலை செய்ய உத்தர விட்டான். இந்த ஆன்மீக அறநெறியை அஞ்சா நெஞ்சத்துடன் எடுத்துக்காட்டி, விலங்குத் தன்மையிலிருந்து, தன்னை மனிதத் தன்மைக்கு மாற்றிய கவிஞர் அகமதுவுக்கு நன்றியும், வணக்கமும் தெரிவித்தான். தன்னுடைய அகக்கண்ணைத் திறக்கும்படி செய்த கவிஞர் அகமதுவை மிகவும் அழுத்தமாக உடலோடு ஒட்டத் தழுவிக் கொண்டு கவிஞருக்கு வேண்டிய அளவு உபசாரம் செய்து உள்ளம் உவக்க அரண்மனையிலிருந்து அவரை வீட்டிற்குச் சிவிகையில் ஏற்றி அனுப்பி வைத்தான் தைமூர்லங்க்.