பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்


இதனைக் கேட்ட பாதிரியார், விருப்பும் வெறுப்புமற்ற பாவனையோடு சாந்தமான குரலில், “அதை நான் உங்களுக்குக் கற்பிப்பதில் எந்த விதத் தயக்கமும் இல்லை. ஆனால், அந்த அரிய நூலை நீர் கற்றுக் கொள்வதற்கான வயதுதான் கடந்து போய்விட்டது” என்றார், பாதிரியார்.

“என்ன?, இந்த வயதில் அதனை நான் கற்றுக் கொள்ள முடியாதா? அது அவ்வளவு கடினமான ஒரு நூலா?” என்று சற்றுத் தன் குரலை உயர்த்தினான் கோயபெல்ஸ்.

“ஐயா, உண்மையைச் சொன்னால், யூத இனத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன், அந்த மத நூலைக் கற்க விரும்பினாலும் கூட, அவனை நாங்கள் தீரப் பரிசோதிப்போம். முதலில் மூன்று கேள்விகளைக் கேட்போம். அவற்றிற்குச் சரியாக விடை அவன் தரவில்லையெனில் அவனுக்கு அது கற்பிக்கப்படுவதில்லை” என்று வினய பூர்வமாக அறிவித்தார், பாதிரியார்.

“நல்லது, அப்படியானால், அப்பரிசோதனையை இப்போதே தொடங்குங்கள். நான் அதில் நிச்சயம் தேர்ச்சி பெறுவேன்” என்றான், கோயபெல்ஸ்.