கவிஞர் வெள்ளியங்காட்டான்
61
சிறுவன் முகத்தில் இருந்ததை ஓவியர் கண்டார். ஆனால், அந்தச் சிறுவனின் கிழிந்த உடைகளும் உடலும் மிகவும் அழுக்குப் படிந்து இருந்தன. எனினும், ஒரு கலைஞன் விரும்ப வேண்டியதாகவே இருந்தது, அந்தச் சிறுவனுடைய முகம்.
ஏழைப்பட்ட அந்தச் சிறுவனின் பெற்றோர்கள் அனுமதியோடு கூடவே அவனை அழைத்துக் கொண்டு ஓவியர் தம் இருப்பிடம் போய்ச் சேர்ந்தார். குழந்தை ஏசுவின் திருவுருவம் ஓவியமாகத் தீட்டி முடியும்காறும் ஒவ்வொரு நாளும் அந்தச் சிறுவன் ஓவியர் கருத்துக்கிணங்க அமர்ந்து கொண்டிருந்தான். அவனுடைய பொறுமையும், இயல்பும் ஓவியருக்கு மனநிறைவை அளிப்பதாயிருந்தது. எண்ணியதை எண்ணியவாறு தீட்டி முடித்த இந்த இளமை ஓவியம் மிகமிக இயல்பாக அமைந்து காண்பாரைக் களிப்புறச் செய்தது.
ஆனால், ‘ஜுடஸின்’ ஒவியத்திற்கான ரூபதரிசினமாய் யாருமே அவருக்குக் கிட்டவில்லை. இடையில் ஒன்றன்பின் ஒன்றாய் இரண்டு ஆண்டுகளும் வந்து சென்றன. சித்திர வரிசையில், இனி எழுதி முடிக்க வேண்டிய ஓவியம் இது ஒன்று மட்டுமே.