கவிஞர் வெள்ளியங்காட்டான்
63
கொள்ளவில்லை. இயல்பாகவே, கொடிய செயல்களைச் செய்து செய்து முதிர்ச்சியடைந்த ஒரு கொடிய முகத்தை ‘ஜூடஸ்’ ஓவியத்திற்காக அவர் மேலும் தேடத் தொடங்கினார். கலைஞனின் உள்ளம் எளிதில் திருப்தியடையவில்லை. ‘ஏனாதானம்’ என்பது ஒரு கலைஞனிடம் என்றுமே காணமுடியாது போலும்.
ஒருநாள் உச்சி வேளையில் ஓவியர் அயலூரில் இருந்த ஒரு மதுபானக் கடையில் மது அருந்தியவாறு உட்கார்ந்திருந்தார். அப்போது கந்தல் துணியைக் கட்டியிருந்த மிகமிகக் கோரமான முகத்தையுடைய ஒருவன் தள்ளாடியவாறு வந்து முன் வாசல் படியில் கால் தட்டிக் கீழே விழுந்தான். அந்த நிலையிலேயே ‘மது, மது’ என்று அவன் அங்கிருந்தவர்களைப் பார்த்து யாசிக்கலானான். ஓவியர் அவனை மெல்ல எடுத்து நிறுத்தி அவன் முகத்தைப் பார்த்துத் திடுக்கிட்டார். அவனுடைய முகபாவம் ஒரு மனிதன் உலகத்தில் செய்ய இருந்த எல்லாப் பாவங்களையும் செய்து முடித்ததாகப் பிரதிபலித்தது.