பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்

71


“இருக்கலாம், நீங்கள் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர். ஆனால், அவர் ஒரு பரோபகாரியாக இருந்தார். தம்முடைய மக்களும் கூட மிகமிக நல்லவர்களாக, மற்றவர்களுக்கு வேண்டிய உதவி ஒத்தாசை புரிபவர்களாக வாழ்வதை மிக மகிழ்ச்சியோடு அவர் தம் கண்ணாரக் கண்டார். அவர், பழம் போன்ற கிழவனாகி இருந்த முதுமைக் காலத்திலும், தாய்நாட்டைப் பகைவர்கள் முற்றுகையிட்ட போது தம் கூர்மையான அறிவு ஆலோசனைகளினால் பகைவரை வெல்ல எல்லோருக்கும் அவர் உத்வேகமளித்தார். அந்த நல்ல மனிதர் கடைசியாகத் தன்னுடைய நாட்டிற்காகப் போராடி இறந்தார். அவருடைய மரணத்துக்காக ஏதென்ஸ் நகர மக்கள் அனைவரும் தத்தம் கண்ணீரையே ஒரு ஆறாகுமாறு வடித்தார்கள்” என்றார் சொலோன்.

“போகட்டும், நீர் அதற்கடுத்தபடியாகப் பார்த்த பெரும் சுக புருஷர் யார்?” என்று குரோசஸ் கேட்டான்.

“தாயையும், தந்தையையும் அன்போடு ஆதரித்து அவர்களை மகிழச் செய்த ‘ஜீனோ’ என்ற பெயருடைய ஒரு வாலிபன் பெரும் சுக புருஷன்” என்று சொலோன் கூறினார்.