பக்கம்:நெய்தற் கன்னி.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 இ. புலவர் கா. கோவிந்தன்

"பெண்ணே! இனி, உன்னைப் பிரியேன். பிரிந்தால் என் உயிர் வாழாது. இது உண்மை; என் அன்பில் ஐயங் கொள்ளாதே. நான் வணங்கும் கடவுளர் மீது ஆணை !” எனக் கூறி ஆணையிட்டு அவள் அச்சத்தைப் போக்கினான். அவன் ஆணையை நம்பி அவள் அவன் காதலை ஏற்றுக்கொண்டாள். அன்று தொடங்கி அவ்விருவரும் காதலால் கட்டுண்டு மகிழ்ந்தனர். ஒருநாள் புன்னை மரச் சோலையுள் புகுந்து மகிழ்வர்; மறுநாள் அப்புன்னை மரச் சோலையை அடுத்திருந்த பன்மலர்ச் சோலையுள் புகுந்து பேரின்பம் காண்பர். மற்றொரு நாள், அடும்பங் கொடி வளர்ந்து அணி செய்து கிடக்கும் கடற்கரை மணலில் அடும்ப மலர் கொய்தும் அலவன் ஆட்டியும் ஆடி மகிழ்வர். இவ்வாறு சின்னாட்கள் கழிந்தன.

அவர் காதல் சிறுகச் சிறுக ஊரில் உள்ளார் சிலர்க்குத் தெரிந்து விட்டது. அதனால், அவர்கள் முன் போல் தடையின்றிக் கலந்து மகிழ்வதற்கு வாய்ப்பில்லாது வருந்தினர். காதலனை ஒரு நாள் காண இயலாது போயினும் அவள் கண்ணிர்விடத் தொடங்கினாள். அஞ்சி அஞ்சி வாழும் அன்பு வாழ்க்கையை வெறுத்தாள்; காதல் இன்பத்தில் அச்சமோ, அயலார் தலையீடோ அறவே கூடாது என எண்ணினாள். அத்தகைய பேரின்ப வாழ்வு, களவுக் காலத்தில் அரிதாம். அது, பலர் அறிய மணந்து வாழும் மாண்புமிகு கற்புக் காலத்திலேயே உண்டாம் என உணர்ந்தாள். அதனால் அவனை மணந்து பெறும் வாழ்வில் அவள் மனம் சென்றது. ஆனால் இளைஞன் உள்ளமோ அதற்கு மாறாகச் சென்றது. கற்புக் காலத்தில் இடையறா இன்பம் பெறலாம் என்றாலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/120&oldid=590197" இலிருந்து மீள்விக்கப்பட்டது