பக்கம்:நெய்தற் கன்னி.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி இ. 119

அவ்வின்பம் களவுக் காலத்து இன்பம் போல் பேரின்பம் உடையதாகாது. மேலும் திருமணத்தைத் திடுமென முடித்து விடுதலும் இயலாது. வரைவிற்கு வேண்டும் பெரும் பொருளை வேற்று நாடு சென்று ஈட்டி வருதல் வேண்டும்; அது அத்துணை விரைவில் ஆகிவிடாது. ஆகவே, திருமண நிகழ்ச்சியைச் சில காலம் கழித்து வைத்துக்கொள்ள விரும்பினான். அந்நிலையை அவளால் தாங்கிக்கொள்வது இயலாதாயிற்று. வரைவு சில நாள் கழித்து நிகழ்வது குறித்து அவள் கவலையுற்றிலள்; அதுகாறும் அவனை இடையறாது பெற்று இன்பம் நுகர்தற்கு இயலாதே என்றே எண்ணி வருந்தினாள். அதற்கு ஏற்ப, அவன் அவளைக் காண நாள் தவறாது வரினும், ஒவ்வொரு நாளில் ஒவ்வொர் இடையூறு உற்று, அவளைக் கண்டு களிப்பூட்டுவது இயலாது வறிதே திரும்புவன். அவன் வருகைக்காகக் காத்திருந்து காத்திருந்து கலங்கினாள் அவள். அதனால் அவள் துயர் மிகுந்தது.

அவள் உள்ளகம் ஆற்றொனாத் துயரில் ஆழ்ந்து போகவே, அவ்வக வுணர்வுகளோடு தொடர்பை யுடையவர்ய புற உறுப்புக்களும் தம் நலம் கெடலாயின. மாந்தளிர் போலும் நிறம் வாய்ந்து மாண்புற்ற அவள் மேனி, பகற் காலத்தில் ஏற்றிய கை விளக்கு சுடர்விட்டு ஒளி காட்டாது சாம்புவதுபோல் பசலை படர்ந்து பாழுற்றது. பருத்து நீண்ட அவள் தோளின் முன் கைகளில் நிறைந்திருந்த வளைகள் தாமே கழன்று போகுமாறு உடல் தளர்ந்து விட்டது. இத்தனை அணிகளையும் இவள் இடை எவ்வாறு தாங்கிக் கொள்கிறதோ எனக் கண்டோர் வியக்கக் கணக்கிலா அணி அணிந்து அழகுற்ற அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/121&oldid=590198" இலிருந்து மீள்விக்கப்பட்டது