பக்கம்:நெய்தற் கன்னி.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி 121

ஆழ்கடல் நீரில், வாணிக வளம் கருதி வெளிநாடு சென்று சென்ற இடங்களில் சிறிதும் அழிவுறாது, சிறந்த பல பண்டங்களைப் பெற்று, அப்பண்டங்களோடு வந்து சேர்ந்த எண்ணற்ற கலங்கள், வரிசை வரிசையாக நிற்கும் வாணிக வளம் கொழிக்கும் கடல் நாட்டுக் காவலனே!" என அவனையும், அவன் நாட்டு வளத்தையும் வாழ்த்துவாள் போல் வாழ்த்தி, ‘அன்ப இரை தேர்ந்துண்டு கடற்கரை மணலில் களித்துத் திரியும் புள்ளினங்களும் தத்தம் காதற் பெடைகளைப் பிரியாதிருந்து மகிழ்வதையே விரும்பும் கவின்மிக்க காட்சிகளைக் கண்டும், உனக்குப் பலர் அறிய மணம் செய்து கொள்வதால் இவளைப் பிரிவின்றிப் பெற்று மகிழும் மனவலம் வாய்க்கவில்லையே! நின் நாட்டு வணிகப் பெருங்குடி மக்கள், வரைந்து மணவாழ்க்கை மேற்கொண்ட மன நிறைவால் எடுத்துச் செல்லும் வினைகளில் ஈடிலா வெற்றி கண்டு வீடு திரும்புவதைக் கண்டும், அவரைப் போல், இவளை மணந்து நிறை வாழ்வு பெற்று, வங்கம் ஏறி, வாணிகம் புரிந்து வாழும் வளமார் வாழ்வில் உன் மனம் செல்லவில்லையே! என்னே உன் இயல்பு இருந்தவாறு! இணைந்து வாழும் அப்பறவை களையும், வினை வாய்த்து வீடடைந்து மகிழ்ந்து வாழும் மக்களையும் காணும் உன் காதலி, அம்மனம் நிறை வாழ்வு தனக்கு வாய்க்கவில்லையே, அதற்கு நம் காதலன் துணை புரிந்திலனே என எண்ணி ஏங்கி வருந்துகின்றனளே! என இடித்துரைத்தாள். - அவ்வாறு, தான் மறைத்துமொழி கிளவியால் எடுத்துரைத்ததை எண்ணி இளைஞன் வாய்மூடி இருந்தானாக மீண்டும் தோழியே பேசத் தொடங்கி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/123&oldid=590200" இலிருந்து மீள்விக்கப்பட்டது