பக்கம்:நெய்தற் கன்னி.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி இ. 127

வழியில் நடந்து காட்ட வேண்டும் என்பதை உணர்ந்திலனே என வருந்தினாள். உணராத அவனுக்குத் தானேனும் உணர்த்தித் தெருட்டுதல் வேண்டும் எனத் துணிந்தாள். அதனால் அவனுரர் சென்று அவனைக் கண்டாள். அவள் ஆண்டுச் சென்றிருந்த போது, அவன் தன்னுரர்க் கடற்கரையில் கடல் காட்டும் காட்சிகளைக் காண்பதில் மகிழ்ந்திருந்தான். கரிய கழிமுள்ளியும், தில்லையும் மட்டுமே வளர்ந்திருந்தமையால் அக்கானற் சோலை காண மகிழும் வனப்பு வாய்ந்திலதேனும், அக்கானற் சோலையை அடுத்திருந்த மணல் மேட்டில் வளர்ந்திருந்த தாழை அவனை மிகவும் கவர்ந்திருந்தது. குடம்போலும் பழம் தொங்க வளைந்து வளர்ந்திருந்த அம்முடத்தாழை, ஆசிரியரை அடுத்து, அன்புமிக்க மாணவனாய் இருந்து மாண்புற்ற அவன் மனத் திரையில் ஆவின் கீழிருந்து அறம் உரைக்கும் உயர் பேராசிரிய முதல்வனாகிய தகூவிணாமூர்த்தி, தன் கையில் தாங்கியிருந்த நீர் நிறைந்த கரகத்தை, அவ்வாலின் தாழ்ந்த கிளையில் மாட்டித் தொங்க விட்டிருக்கும் காட்சியைக் காட்டக் கண்டு களிப்புற்றிருந்தான்.

அந்நிலையில் ஆங்குச் சென்று அவனைக் கண்ட தோழி, அவனை அணுகி, ‘அன்ப ! உன் உள்ளம் உவந்திருக்கும் இந்நிலையில் உனக்கு இன்பம் ஊட்டும் இனிய நிகழ்ச்சியை நினைவூட்டும் இத்தாழை, துன்பமிக்க என் உள்ளத்திற்கு நினைவூட்டுவது யாது என்பதை அறிவையோ அன்ப! அத்தாழை உச்சியைக் காண். பகலெல்லாம் பல உயிர்களைக் கொன்று தின்று கொடுமை புரிந்த நாரை, ஆங்கு வந்து அமர்ந்து எவரும் விரும்பும் இனியமனம்நாறும் தாழை மலர் மடல் விரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/129&oldid=590206" இலிருந்து மீள்விக்கப்பட்டது