பக்கம்:நெய்தற் கன்னி.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i40s இ. புலவர் கா. கோவிந்தன்

எளிதில் தாங்கி அழிக்கவல்ல ஆற்றலும், அகலமும் உடையது அவன் மார்பு. வெற்றிச் செல்வம் வாய்த்தற்கு ஏற்ற வலியுடையதாய் விளங்கிய அவன் வடிவம், கண்டாரை மகிழ்விக்கும் கட்டழகும் வாய்ந்திருந்தது. அழகு நடம்புரியும் அகன்ற மார்புடையனாய அவன், தன் அரசு நிலைக்கு ஏற்ற அணிகளாலும், அழகிய மாலைகளாலும் அம் மார்பை அணிசெய்து மகிழும் மன எழுச்சியும் கொண்டிருந்தான். அரசிளங்குமரன், இவ்வாறு பிறப்பால், பேராண்மையால், அன்பால், அரிய குணங்களால், அழகொழுகும் வடிவால் சிறப்புற்றுத் திகழ்வது தெரிந்து, அவன் தன் மீது கொண்ட காதலை ஏற்றுக் கொண்டாள் ஒர் அழகு இளம் நங்கை.

அவர் நாட்டுக் கடற்கரைக்கண் இருந்த அழகிய புன்னை மரச் சோலையே, அவர்கள் ஒருவரையொருவர் கண்டு, காதல் உணர்வுகளால் தூண்டப் பெற்றுக் களிப்புற்ற இடமாம். காவல் மிக்க அச்சோலையில், நெய்தல் நிலத்து மலர்கள் அனைத்தினும் வண்ணத்தால், வடிவால், வாசனையால் மாண்பு மிகுந்த மலர்களை யுடையதான புன்னை மரத்து நிழலில், கலந்து உறவாடிய நாட்கள் பலவாம். அவ்வாறு அவர் கொண்ட காதலுணர்வு, அவ்விருவர் பெற்றோரும் அறியாவாறே வளர்ந்து உறுதி பெற்றது. அவள் அவனோடு இரண்டறக் கலந்து விட்டாள். அவன் இல்லாமல் அவளால் உயிர் வாழ்வது இயலாதாயிற்று. அவனை ஒரு நாள் காண முடியாது போயினும், அவள் நெஞ்சு நனி மிக நடுங்கலாயிற்று. ஆனால், அரசர் குடியில் பிறந்து பகை வெல்லும் பணி மேற்கொண்டிருக்கும் அவனால், எந்நேரத்திலும் அவள் பின் திரிவது இயலாதாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/142&oldid=590219" இலிருந்து மீள்விக்கப்பட்டது