பக்கம்:நெய்தற் கன்னி.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 இ. புலவர் கா. கோவிந்தன்

ஒன்றை ஆக்கினான்; தன் உள்ளங் கவர்ந்தாளின் உருவை ஒரு கிழியில் வரைந்து கொண்டான், மடல் மாவின் கழுத்தில் மணி மாலையைக் கட்டினான்; தன் கழுத்தில் மலர் மாலையைச் சூட்டிக் கொண்டான்; மணி ஒலிக்க மாவை ஈர்த்துக் கொண்டு அவளுர் நோக்கிப் புறப் பட்டான்.

அப் பெண்ணின் ஊர் எல்லைக்கண், பெரியோர் சிலர் அவனைக் கண்டனர்; அவனைத் தடுத்து நிறுத்தி, இத் திருக்கோலம் கொள்ளற்காம் காரணம் யாது? அவவூரினர்.பால் அவன் காணும் குறை யாது என்று வினவினர். தன்னைத் தடுத்து நிறுத்தியவர்களை இளைஞன் ஊன்றி நோக்கினான். சான்றோர்க்குரிய பண்புகள் அவர் பால் அமைந்திருக்கக் கண்டான். அதனால் அவரால் தன் குறை தீரும்; பிறர் நோய் போக்கும் பெரியோராய் அவர்கள், தன் குறை கேட்டுத் தான் விரும்பும் அப் பெண்ணைத் தனக்கு மணம் செய்து வைப்பர் என நம்பினான். அதனால் தன் காதல் நோயை அவருக்குக் கூறத் துணிந்தான்.

துணிந்தவன் உள்ளத்தில் ஒர் ஐயம் எழுந்தது. அவன் உள்ளத்தில் காமவெறியே தலை தூக்கி நின்றமையால், சான்றோர் தம் கடமைகளை மறந்திருப்பரோ? தன் குறைகளைக் கேட்பதோடு நின்று விடுவரோ? அது தீர்க்கும் அறவுள்ளம் அவர்க்கு இன்றாகிப் போமோ? - என்றெல்லாம் எண்ணி ஐயுற்றான். அதனால் ஆன்று அமைந்த சான்றோராகிய அவர்க்குத் தான் அறிவுரை கூறுதல் முறையாகாது; அப்பெருந் தகுதி தனக்கு இல்லை என எண்ணி அடங்கி விடாது, தன் குறைகளைக் கூறு வதற்கு முன்பாக, அவர்க்கு அறிவுரை கூறத் தொடங்கி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/178&oldid=590255" இலிருந்து மீள்விக்கப்பட்டது