பக்கம்:நெய்தற் கன்னி.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 இ. புலவர் கா. கோவிந்தன்

வண்டுகள் வந்து மொய்க்க வாய் திறக்கும் மலர்கள்போல், காதலன் வரவு கண்டு அவள் வாய்க்கடையில் அரும்பும் இள முறுவலைக் கண்டாள். அவள் காதல் நோய் துயர் எல்லையை எட்டிவிட்டது. பறவைகளின் பிரிவறியா வாழ்வைக் கண்டு ஒருத்தி கண்ணிர் சொரிந்து கலங்க, அவள் கண்முன் காதலன் வரவு கண்டு, ஒருத்தி களித்து நகைக்கும் காட்சியைக் காட்டித் துயர்செய்யும் மாலையை, “ஏ மாலையே! நீ தனிமிகக் கொடியை. அரசிழந்து அல்லல் உறும் நாட்டில் வலியோரை மேலும் வாழ்வித்து, மெலியோரை மேலும் துயர்ப்படுத்தும் கொடியோர் போல், காதலனைப் புணர்ந்து கிடப்பாரை மேலும் இன்பத்தில் ஆழ்ந்துகின்றனை. காதலனைக் காணாது கலங்கும் என்னை மேலும் துன்பத்தில் ஆழ்த்துகின்றனை ஆற்றவும் கொடியோய் நீ. அரசிழந்து அல்லல் உறும் காலம்போல், பகலிற்கும் இரவிற்கும் இடைப்பட்ட நீ நல்லோரால் நாவலிக்கப் பழிக்கத் தக்காய்!” என மாலை யைப் பழிப்பாள் போல், மாலைக் காட்சிகளால் தன் மனம் படும் துன்பத்தைப் புலப்படுத்திப் புலம்பினாள். .

மாலையைப் பழித்தவள் மனத்தில் மீண்டும் ஒரு மருட்சி! 'பிழை மாலையிடத்து இல்லை. எல்லோரும் இன்புற்றிருக்கும் இம்மாலையில் நான் மட்டும் துன்புற் றிருப்பது இம்மாலையால் அன்று. பிற மகளிரைப்போல் நான் என் காதலனைப் பெறாது தனித்து நிற்பதே துயர்க்குக் காரணமாம். ஆகவே, கொடுமை செய்தவர், பிரிந்து போய்ப் பன்னெடும் நாட்களாகியும் என்னை நினைந்து வாராது, என்னை அறவே மறந்து கைவிட்ட என் காதலனே ஆவார். ஆகவே, பழிக்கத் தக்கவர் அவரே;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/18&oldid=590095" இலிருந்து மீள்விக்கப்பட்டது