பக்கம்:நெய்தற் கன்னி.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 ஆ. புலவர் கா. கோவிந்தன்

உள்ளங் கவர்ந்த அக் கள்ளியின் பெருமைகளையும், ஏனைச் சிறுமைகளையும் ஒன்றையும் விடாது பாராட்டிப் பாடுகிறேன்; நின்று கேளுங்கள்.

"பெரியோர்களே! தேன்போல் இனிக்கும் மொழி யினள் என அறிந்து, அவள்பால் காதல் கொண்டேன். ஆனால் அவளோ என் மீது சிறிதும் காதல் கொண்டிலள். காதல் நோயால் தான் சிறிதும் கலங்காது என்னை மட்டும் துன்புறப் பண்ணினாள். காம நோயாகிய கரை காணாக் கடலில் வீழ்ந்து கலங்கிய நான், நண்பர்கள் உடன் இருந்து உற்ற துயர் போக்கற்காம் உபாயங்களைக் கூறித் துணை புரியவல்ல பகற்காலத்திலும், என்னைத் தனியே விடுத்து எல்லோரும் உற்ங்கும் இரவின் இடையாமத்திலும், கடல் அலைபோல் ஓயாது அலைக்கும் காம நோயால் நனிமிக வருந்தினேன். அவ்வாறு வருந்திய நான், இறுதியில் காம நோய்க் கடலைக் கடக்கவல்ல புணையாக இம் மடல் மாவைக் கைக்கொண்டேன். அதனால் மடல் ஏறி மன்றம் புகுந்தேன். பெரியோர்களே! என் உள்ளத்தில் காம மயக்கத்தைப் புகுத்தி விட்ட அவள் காட்டித் தந்த இம்மடல்மா, அவள் தந்த காம நோயால் அழியவிருந்த என் உயிரை அழிய விடாது காக்கவல்ல அரிய மருந்தாய் நின்று துணை புரிந்தது. * .

'பெரியோர்களே! என்னை இந் நிலைக்குக் கொண்டு விட்டவள், அவள் அல்லள்; என் மீது பகை கொண்ட காமன் என்னை அழித்து வருக என ஆணையிட்டுப் போக்கிய படையே என்னை இவ்வாறு ஆக்கிவிட்டது. அப்படைதான் தன் உண்மை உருவோடு வாராது, மாட்சி மிக்க அணிபல அணிந்து, மானெழில் பெற்று விளங்கும் அப்பெண்ணின் அழகுருவில் வந்துளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/180&oldid=590257" இலிருந்து மீள்விக்கப்பட்டது