பக்கம்:நெய்தற் கன்னி.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

அறனுமாம் நுமக்கு

தமிழகத்துப் பேரூர் ஒன்றின் மன்றத்தில் ஊர்மக்கள் ஒன்று திரண்டிருந்தனர். மாலைக் காட்சிகளால் மனம் மகிழ்ந்திருந்த அவர்கள் கருத்தைக் கவரும் நிகழ்ச்சி யொன்று, ஆங்கே திடுமென நிகழ்ந்து விட்டது. அவ் ஊருக்குப் புதியவனான ஓர் இளைஞன், அம்மன்றை நோக்கி வந்து கொண்டிருந்தான். ஒரு கையில், பனை மடலால் குதிரை வடிவில் பண்ணப் பெற்ற ஊர்தி ஒன்றைப் பற்றி ஈர்த்துக் கொண்டு, மற்றொரு கையில் பெண்ணொருத்தியின் உருவம் தீட்டப் பெற்ற கிழியை ஏந்திக் கொண்டு வந்து சேர்ந்தான். பூளை, உழிஞை போலும் பூக்களால் ஆன மாலை மார்பிலும், நீலமணியும் பொன்னணியும் நெருங்க வைத்து ஆக்கினாற்போல் காட்சி அளிக்கும் மயிற்பீலியும், பொன்னிற ஆவிரை மலரும் கொண்டு. தொடுத்த கண்ணி தலையிலும் கிடந்து காட்சி அளித்தன. இளைஞனின் இத் திருக்கோலக் காட்சி ஆண்டுக் கூடியிருந்தார்க்கு அரிய விருந்தாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/185&oldid=590262" இலிருந்து மீள்விக்கப்பட்டது