பக்கம்:நெய்தற் கன்னி.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி ஒ 227

வானத்து முயலுக்கு அவள் அவ்வாறு விளக்கம் கூறிக் கொண்டிருக்கும்போது காற்று வந்து அவள்மீது மெல்ல வீசிற்று. அவ்வளவே. அவள் கருத்து காற்றின்மீது சென்றது. காதலனைத் தேடிப் பிடிக்கக் காற்றை ஏவல் கொள்ளக் கருதினாள். உடனே அதைப் பார்த்துக், "காற்றுக் கடவுளே! துன்பமாகிய தேர் ஊர்ந்து வந்து, அளிக்கத்தக்க என் உள்ளத்தில், கெடாத காதல் நோயைச் செய்து கை விட்டுப் போன அவ்வன்பற்றவனைத் தேடிப் பிடிக்கப் பல கோடிக் கதிர்களைப் பெற்ற ஞாயிற்றின் ஒளி, வானத்திலும், ஞாலத்திலும் பரந்து சென்றுளது. அது சென்றுள்ள இடத்திற்கெல்லாம் நீயும் சென்று, என் நலத்தை நுகர்ந்து என்னைக் கைவிட்டுச் சென்று ஒளிந்து திரிவானைத் தேடிப் பிடித்து வந்து எனக்குக் காட்டு. அவ்வாறு காட்டாது போனால், இந்நிலவுலகம் எங்கும் என் கண்ணிரைத் தெளித்து, அதிலிருந்து தோன்றும் அழலால் உன்னை அறவே சுட்டு விடுவேன்!" என அச்சம் ஊட்டும் ஆணையை அதன்மீது ஏவினாள்.

காற்றோடு பேசிக் கொண்டிருந்தவள் கண்முன் கடல் தென்பட்டது. உடனே அதைப் பார்த்துக் "கடலே! காதலன் உனக்கு அப்பால் உள்ள நாட்டில் வாழ்கிறான். என்று கூறுகிறார்கள். ஆங்குச் சென்று அவனைத் தேடுதல் வேண்டும். ஆகவே, ஆங்குச் செல்ல எனக்குச் சிறிதே. வழிவிடு; ஒதுங்கி வழி விடாயானால், நீ வெறும் மணலாகி விடும்படி, உன் நீரை எல்லாம் என் புறங்காலினாலேயே இறைந்து விடுவேன்! நான் மேற்கொணடிருப்பது, காதலனைத் தேடிப் பிடிக்கும் நல்ல தொண்டு ஆதலின், எனக்கு அறக்கடவுள் துணையாக உவந்து வெற்றியைத்' தேடித் தருவன்! இதை அறிந்து என் ஆணைக்கு அடங்கி வழிவிடு!" என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/229&oldid=590306" இலிருந்து மீள்விக்கப்பட்டது