பக்கம்:நெய்தற் கன்னி.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி ஆ 21

இவ்வாறு துயர் உறுவாளை அவள் தோழி கண்டாள். இவள் இவ்வாறே கிடந்து துயர் உற்றால், இவள் உடல் நலம் கேட்டு உயிரிழந்து போகவும் நேரும், ஆகவே இவள் மனத்துயரை எவ்வாறேனும் மாற்ற வேண்டும்! எனக் கருதினாள். மனம் மகிழும் காட்சி களைக் கண்டால் மனநிலை மாறும் என நம்பினாள். அந்நிலையில் மாலையும் வந்தது. அவளை அழைத்துக் கொண்டு உலாவச் சென்றாள். சென்று கொண்டே, "பெண்ணே ! ஒளி தரும் தன் கதிர்களால் உலகிற்கு ஒளியூட்டி அதன்கண் உள்ள ஒவ்வொரு பொருளையும் உள்ளவாறே காட்டவல்ல பகற் காலத்தை ஆக்கி அளித்த ஞாயிறு, அவ்வொளிக் கதிர்களைத் தன்பால் மீட்டுக் கொண்டு, பகற்காலத்தை அழித்துவிட்டு மேலைத் திசை மலையில் சென்று மறைந்து விட்டான். தன் ஒளிக் கதிராகிய வாய் கக்கிய பகற்காலத்தை மீண்டும் அவ் வாயே விழுங்கியதுபோல் உலகை மறைத்துவிட்டு ஒளிந்து கொண்ட ஞாயிற்றின் செய்திறம்காண். ஞாயிற்றின் மறைவை எதிர்நோக்கியிருந்தது போல் ஈண்டு வந்து சூழ்ந்து கொண்டது இருள். நேமிப் படையேந்தி நிற்கும் நெடுமாலின் நீலநிறம் போல் எங்கும் நிறைந்துவிட்ட இவ்விருளைக் காண். பரவிய இருளைப் பாழ் செய்து விட்டு நிலவின் ஒளி எழுந்துவிட்டது. நாட்டுள் புகுந்து விட்ட பகைவர் படையை வென்று புறங்காணும் வேந்தன் போல், இருளைப் புறங்கண்டு நிலாவொளி வீசும் வெண்திங்கள் வருகையைக் காண். இத் தாமரைப் பொய்கையைப் பார். காலையில் மலர்ந்த மலர்கள் மாலையில் வாடி வாய் மூடிக் கிடக்கின்றன. இரவு. வந்துற்றதும் தத்தம் கணவன்மாரோடு களித்திருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/23&oldid=590100" இலிருந்து மீள்விக்கப்பட்டது