பக்கம்:நெய்தற் கன்னி.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 இ. புலவர் கா. கோவிந்தன்

தன் நெஞ்சோடு புலந்து கொண்டிருக்கும் போதே, மாலை மறைய, முழுமதி தோன்றிவிட்டது. உடனே அதை நோக்கி, "வெண்ணிலவு பொழியும் வெண் திங்களே! இவ்வூரார் எல்லாம் பார்த்துச் சிரிக்கும்படி, என் உயிர் என்னை விட்டுப் பிரிய நேர்ந்து விட்டது. என் அழகிய கை வளைகள் கழன்று போகும்படி, தன் அன்பை மறந்து, அருளையும் நினையாமல் என்னைக் கைவிட்டுப் போய் விட்ட என் காதலன் செய்த, உடலையும் உள்ளத்தையும் ஒருசேரக் கலக்கும் இக்காம நோய்க்கு, என்னைப் பார்த்து நகைக்கும் இவ்வூரார் மருந்தறிய மாட்டார்கள். அம் மருந்தறிந்து அளித்து நீக்க வல்லவன் நீ ஒருவனே! ஆகவே என்பால் அருள் கொண்டு, அம் மருந்திருக்கும் என் காதலன்பால் சென்று வருவாயாக!” என வேண்டிக் கொண்டாள்.

ஆனால், அவள் வேண்டுகோளை நின்று கேட்க விரும்பாதது போல், அவ் வெண்திங்கள் விரைந்து நகர்ந்து கொண்டேயிருந்தது. அதனால், அதை விடுத்தாள். தனக்கு அண்மையில் தன்னைச் சூழ்ந்து நிற்கும் ஊராரைப் பார்த்தாள். சேய்மைக்கண் உள்ள ஞாயிறும் திங்களும் தன் துயர் தீர்க்க மாட்டா; இவரே தீர்ப்பர் எனத் துணிந்தாள் போலும். உடனே, "என் காமநோயை நீக்குவதையே உம் கடமையாகக் கொண்டு நிற்கும் ஊர்ப் பெரியோர்களே! நீங்கள் எவ்வளவுதான், என் காமவெறி கண்டு என்னை எள்ளி நகைத்தாலும், என் காதலன் என்னைச் சிறிதும் இகழான். நான் நினைத்தால், என் நெஞ்சு நினைக்கும் விரைவிலும், அதிகமாக விரைந்து வந்து என் கண்ணுள்ளே புகுந்து காட்சி தருவான். அது ஒன்றைக் கொண்டே என் நெஞ்சு ஆறுதல் கொள்ள வேண்டும். ஆனால் அது ஆறுதல் கொள்வதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/240&oldid=590317" இலிருந்து மீள்விக்கப்பட்டது