பக்கம்:நெய்தற் கன்னி.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 இல் புலவர் கா. கோவிந்தன்

அவளை ஒரு நாள் ஊரார் சிலர் கண்டனர். உடனே தன் புகழ் ஓங்குமாறு உயர்ந்த செயல்களையே செய்து துணைபுரிந்த அமைச்சர்களையும், அவர்கள் தன் உயர்விற்கு உழைத்தவராயிற்றே என்று எண்ணாமல், கடுஞ்சொல் கூறிக் கொன்று அழிக்கும் அரசனைக் காட்டிலும், காமம் மிக மிகக் கொடிது! அதற்கு அன்பு என்பதே சிறிதும் கிடையாது. இதோ பாருங்கள், அன்னத் தூவி பரப்பி ஆக்கிய அழகிய படுக்கையில் ஆரத்தழுவி இன்பம் ஊட்டியவன் கைவிட்டு அகன்று விடவே, அணிகளை யெல்லாம் துறந்து, நாணையும், நிறையையும் காக்க வேண்டுமே என்று கருதாமல், தோள் தளர்ந்து, கண்கள் நீரால் நிறைந்து வழிய, வழியும் அந்நீர், கூரிய பற்கள் நிறைந்த வாய் வழியே ஒழுகிக், குவிந்த கொங்கைகள் மீது சொரியத் தேரோடும் தெருவில் நின்று, மனம் மருள்கின்றாள். அவள்பால் சென்று அவள் கூறுவதைக் கேட்போம், வாருங்கள்,” என்று கூறி, உடன் இருப்பாரையும் அழைத்துக் கொண்டு சென்று, அவளை வளைத்துக் கொண்டனர்.

தன்னை வளைத்துக் கொண்டவர்களை அவள் உற்று நோக்கினாள். அவர் தன்னைப் பார்க்கும் பார்வை "ஒள்ளிய இழை அணிந்தவளே! பிரியேன் என்று கூறிப் பிரிந்து போனவனைப் பிரியான் என்று நம்பி, இப்பேதைப் பெண் இப்போது தன் நாணையும் மறந்து விட்டதைப் பாரேன்!” என்று தங்களுக்குள்ளே கூறிக் கொண்டு, தன்பால் அன்பு கொண்டவர்போல் வந்து தன் நலன் குறித்துக் கேட்டுக் கவலை கொள்வார் போல் தோன்றிற்று. தோன்றவே, "எல்லோரும் வாருங்கள், என் குறையைக் கூறுகிறேன்,” எனக் கூறத் தொடங்கினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/246&oldid=590323" இலிருந்து மீள்விக்கப்பட்டது