பக்கம்:நெய்தற் கன்னி.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி ஒ 283.

அடைத்துக் கொள்ளும் கொடுமையைக் குறைவறக் கொண்டது. கோடை ஞாயிற்றின் வெப்பம் மிக்க கதிர்க் கொடுமையால் மரமும் செடியும் வெந்து கரியாக, மண்ணும் மலையும் உருக, நினைப்பவர் நெஞ்சையும் சுடும் கொடுமை மிக்கது தாம் கடந்து செல்ல வேண்டிய அக்காட்டு வழி என்பதை அவர் அறியாதவரோ? அதை அவர் அறிவார். அவ்வழிச் செல்வார் எத்துணை ஆற்றல் வாய்ந்தவரேனும், ஆண்டு அல்லல் அடைந்து அழுது அழிவர். அவ்வழியைக் கடக்க அவர் அரும் பாடுபட வேண்டி வரும். அரும் பாடுபடினும் அழிவுறாது கடந்து போய் மீண்டு வந்தடைதல் அரிதினும் அரிதாம் என்பதை அவர் நன்கு அறிவார். அறிந்தே, அவ்வழிச் செலவினை அவர் துணிந்து மேற்கொண்டுள்ளார். அம்மட்டோ! தாம் செல்லும் வழியின் அல்லல் எத்தகைத்து என்பதை நீ அறிவாய் என்பதையும் அவர் அறிவார். அருகிருந்து அன்பு காட்ட வேண்டிய கணவர் அகன்று வாழ எண்ணுகின்றனரே என்ற ஏக்கத்தால் இயல்பாகவே வருந்தி வாடும் உன் உள்ளம், அக்கணவர் கடந்து செல்ல வேண்டிய காட்டு வழியின் கொடுமையினை அறியு மாயின் எத்துணை வருந்தும் என்பதையும் அவர் அறிவார். அவ்வருத்த மிகுதியால் உன் உடல் நலன் எவ்வளவோ கெடும். உன் பொன்னிற மேனி ஒளி இழந்து மங்கும். உன் உருவமே வேறாம். தலைக்கோலம் தாழ்ந்து அழகு செய்யும் உன் கூந்தல் மாசு போக நீராடி, எண்ணெய் இட்டு அழகு பெறுதலை மறந்து காய்ந்து கருகும் என்பதையும் அவர் அறிவார். அறிந்தும், அவர் பிரிந்து போயுள்ளார். அம்மட்டோ! மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த வேண்டிய மனைவியை மாளாத் துயர்க்கடலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/285&oldid=590363" இலிருந்து மீள்விக்கப்பட்டது