பக்கம்:நெய்தற் கன்னி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி ஒ 27

அவனைப் போன்றே, அருளையும் அறத்தையும் மதியாது அழிவுத் தொழில் மேற்கொள்ளத் தலைப் பட்டனர்.

மக்கள் தம் வாழ்நாளைப் பயனின்றி வறிதே கழித்துப் பாழாக்கினர். அதனால் நாடு வறுமையுற்றது. நாடு வறுமையுறவே, நாட்டு மக்கள் தலை வணங்காத் தம் தருக்கினை இழந்து, எவரைக் காணினும், அவர் முன் பல்லிளித்து இரந்து நிற்கும் பழிமிகு வாழ்வுடையராயினர். நாட்டின் நால்வகை வளங்களும் மறைந்து போன அப்போதே நாட்டு மக்களின் மன வளமும் மாண்டு போயினமையால், செல்வச் செருக்கால் சிறப்புற்று வாழும் ஒரு சிலரும், ஈத்துவக்கும் இன்பத்தை அறியாராயினர். அதனால், தன் முன் வந்து, தம் வயிற்றினைக் காட்டி, வறுமையைக் கூறி இரப்பார்க்கு இல்லை எனக் கூசாது கூறி அனுப்பும் கொடியவராகிவிட்டனர்.

அரசனும், அமைச்சர் முதலாம் அரசியல் பணியாளரும் இவ்வாறு பண்பற்றவராகி விடவே, நாட்டில் அறம் அழிந்து போக, மறம் தலைவிரித் தாடிற்று. வம்பர்களும் வன்னெஞ்சர்களும் வாழும் வன்னிலமாக மாறிவிட்டது. விலங்கினங்களுள் மிக மிகப் பயந்த விலங்கு மான். மருண்டு நோக்கும் மானினத்தைக் காண்பவர் எத்தகையராயினும், அவர் உள்ளம் அதன்பால் நெகிழ்ந்து விடும். ஆனால், அவ்விரக்க உள்ளம் அந்நாட்டு மக்களை விட்டு மறைந்து விட்டது. ஒரு மான் வெள்ளத்தில் வீழ்ந்து கரை ஏற மாட்டாது கலங்கி வருந்துவதைக் காணும் அவர் உள்ளம், அதை அவ் வெள்ளத்தினின்றும் கரையேற்றிக் காற்பாற்ற வேண்டும் எனக் கருதாது, வேட்டைக்குத் தப்பி விரைந்தோடி மறையும் அதை அம்பெய்து கொல்வதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/29&oldid=590106" இலிருந்து மீள்விக்கப்பட்டது