பக்கம்:நெய்தற் கன்னி.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தற் கன்னி ஜ் 35

மகிழ்ந்தாடிக் கொண்டிருந்த அழகிய ஒர் இளமகளைக் கண்டான். அவளும் அவனைக் கண்டாள்; இருவர் கண்களும் ஒன்று கலந்தன. இருவர் கருத்தும் ஒன்று பட்டன. இருவர் உள்ளத்திலும் காதல் ஊற்றெடுத்தது. அன்று முதல் இளைஞன் ஒவ்வொரு நாளும் ஆங்கு வரத் தலைப்பட்டான். அவளும், அவ்வாறே, அவன் வருகையை எதிர்நோக்கி, ஆங்கு வரும் வழக்கம் மேற்கொண்டாள். இவ்வாறு அவர் காதல் வளர்ந்தது. இருவரும் ஒருயிரும் ஈருடலுமாம் எனக் கூறுமாறு ஒன்றுபட்டனர்.

சில நாள் சென்றன. இளைஞன் வருகை தடைப்பட்டது. அவனை எதிர்நோக்கி வந்து வந்து, அப்பெண் ஏமாந்து போனான். அதனால் அவள் வருத்தம் மிகுந்தது. கண்ணில் நீர் கசிந்தது. உடல் மெலிந்தது; கைவளை கழன்று ஒடுமாறு தோள்கள் தளர்ந்து போயின; முகம் ஒளி இழந்தது. இளையாளின் இந்நிலை மாற்றம் கண்டு, ஊர்ப் பெண்கள் அலர் கூறிப் பழிக்கத் தலைப்பட்டனர். அவள் கண்கள் துயில் மறந்தன; இரவெல்லாம் விழித்திருந்து வருந்தினாள். ஊரெல்லாம் உறங்கி விடும்; அவள் உறங்காள். கடல் அலை எழுப்பும் ஒவ்வொரு ஒலியும் அவள் காதில் சென்று ஒலிக்கும். காரிருள் பரந்த அவ்விரவில் வீசும் கடற்காற்றின் குளிரால் உடல் நடுங்குவதையும் மறந்து, அவள் அவனை நினைத்து வருந்துவள். சேவல் பிரிந்து போய்விடத் தனித்துக் கிடந்து துயர் உறும் நாரைப்பேடு, இரவின் இடையாமத்திலும் உறங்காதிருந்து, உரத்த குரல் எடுத்துத் தன் காதற் சேவலைக் கூவி அழைக்கும் ஒவ்வொரு ஒலியையும், அவள் ஒருத்தியே உறங்காதிருந்து கேட்டு உறுதுயர் கொள்வாள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/37&oldid=590114" இலிருந்து மீள்விக்கப்பட்டது