பக்கம்:நெய்தற் கன்னி.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 ஒ. புலவர் கா. கோவிந்தன்

துயர் பெருகிற்று. இந்நிலை நீண்டால், தான் மாண்டு போக நேரிடும் என உணர்ந்தாள். அதனால் ஒருநாள் தன் காதலனிடம் தன் உள்ள நிலையை உணர்த்தினாள். ஊரார் கூறும் அலராலோ, உற்றார் விதிக்கும் தடையாலோ தம் காதல் வாழ்வு கன்றிப் போகாதிருக்க வேண்டுமாயின், அதற்கு இருவரும், உற்றார் உடனிருந்து நிகழ்த்த, ஊரார் அறிய, மனங்கொண்டு இல்லற வாழ்வு மேற்கொள்வது ஒன்றே வழியாம் என்பதை, அவனுக்கு விளங்க உரைத்தாள். -

கழிகளையும் கானற் சோலைகளையும் கடந்து வந்தும் காதலியைக் காண மாட்டாது வறிதே மீளும் வருத்தத்தால் வாடிய அவனும் அவள் கூறியதை ஏற்றுக் கொண்டான்; வரைவிற்கு வேண்டும் பெரும் பொருளைச் சேர்த்துக் கொண்டு விரைந்து வந்து வரைந்து கொள்வேன் என வாக்களித்துச் சென்றான்.

காதலன் வரைவு முயற்சியோடு வருவான் எனும் நம்பிக்கையால் காதல் நோயை ஒருவாறு தாங்கிக் காத்திருந்தாள் அப்பெண். ஆனால் வாக்களித்தவாறு இளைஞன் விரைவில் வந்திலன். அவன் வருகையை ஒவ்வொரு நாளும் எதிர் நோக்கி ஏமாந்தாள். அதனால் அவள் துயர் பெருகிற்று. கண்கள் கலங்கின; கண்ணிர் முத்து முத்தாகக் கசியத் தொடங்கிற்று. அவள் மேனி தளர்ந்தது. தனிமையைத் தாங்கிக் கொள்ள மாட்டாது அழத் தொடங்கினாள். அவள் மாண்பு மிக்க கவின் மாண்பிழந்தது. இன்னும் சின்னாட்கள் சென்றால் இறந்து விடுவளோ என்று எண்ணும்படியாகி விட்டது அவள் நிலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/68&oldid=590145" இலிருந்து மீள்விக்கப்பட்டது