பக்கம்:நெய்தற் கன்னி.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

தேர் குதிரை பூண்க!

கடல் நாட்டுக் காரிகை ஒருத்தியும், அந்நாட்டு அழகிய இளைஞன் ஒருவனும் காதல் உள்ளத்தால் ஒன்றுபட்டனர். நாள்தோறும் கடற்கரைக்குச் சென்று கழிகளில் மலர் கொய்து மகிழும் வழக்கமுடையவள் அவள். கடற்கரையின் மாண்புமிகு மாலை காலைக் காட்சிகளைக் கண்டு மகிழும் வழக்கமுடையவன் அவன். அவ்வாறு களித்துத் திரியுங்கால் அவர்க்கிடையே ஒருநாள் உண்டான காதல் உறவு வளர்ந்து உறுதி பெற்றது. இருவரும் உயிர் ஒன்று உடல் இரண்டு என மதிக்குமளவு ஒன்றுபட்டு விட்டனர். ஆனால் அவர்கள் இவ்வாறு ஒன்றுபட்ட அந்நிலையிலும் அவர் காதலை அப் பெண்ணின் பெற்றோர் அறிந்திலர். அதனால் அவர்கள் பலர் அறியப் பழக மாட்டாது வருந்தினர். பிறர் காணாவாறு காதல் வாழ்வு மேற்கொள்வது அரிதாதல் கண்டு கலங்கினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/75&oldid=590152" இலிருந்து மீள்விக்கப்பட்டது