பக்கம்:நெய்தற் கன்னி.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 இ. புலவர் கா. கோவிந்தன்

இந்நிலையில் மகளின் பருவ ளர்ச்சி கண்ட அப்

பெண்ணின் தாய், அவளை அவள் விரும்பியவாறு பழகவிட்டிலள். வீட்டைக் கடந்து வெளிச்செல்லாவாறு விழிப்பாயிருந்து காக்கத் தொடங்கினாள். அதனால் கடற்கரைக்குச் செல்வதோ, காதலனைக் கண்டு மகிழ்வதோ செய்ய மாட்டாது அப் பெண் கலங்கினாள். கட்டுக் காவல்களுக்கு உட்பட்டு விட்டாள் காதலி என்பதைக் கண்டு கொண்ட இளைஞன், அன்றுமுதல், அவள் மனைக்கு அணித்தாக வந்து கண்டு செல்லத் தலைப்பட்டான். ஆனால் அது அத்துணை எளிதன்று என்பதைப் போகப் போக அறிந்து வருந்தினான்.

நாள்தோறும் தவறாது வரும் அவன் வருகையை எதிர்நோக்கி இரவின் இடையாமத்திலும் உறங்காது விழித்திருப்பள் அவளும். ஆனால் ஒவ்வொரு நாளிலும் யாதேனும் ஓர் இடையூறு நேர்வதால் காதலியைக் காணமாட்டாது இளைஞன் வறிதே மீள்வன்; கலங்கிக் கண்ணிர் சொரிவாள் அவளும். இடையூறு மிகுவதால், காதலனைக் கண்டு மகிழும் காலம் வரும் போது வருக; அதுகாறும் கலங்காது காத்திருப்போம் என எண்ணி அமைதி கொள்வது காதல் உள்ளம் உடையார்க்கு இயலாது. ஆதலின், அவன் வருகின்றானோ இல்லையோ, அவள் அவன் வருகையை எதிர்நோக்கி இரவெல்லாம் விழித்திருந்து வருந்துவது வழக்கமாகி விட்டது.

- ஒரு நாள் அவன் வருகையை எதிர்நோக்கி விழித்திருந்தாள். உலகத்து உயிர்கள் எல்லாம் உறங்கி விட்டதாக, ஒலி அடங்கி அமைதி நிலவும் அந்நள்ளிரவில் திடுமென ஓர் ஒலி கேட்டது. அது கடற்கரைச் சோலைகளில் கூடு கட்டி வாழும் நாரை போலும் கடற்பறவைகள் உறங்கி விழித்தக்கால் ஒலித்த ஒலியாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/76&oldid=590153" இலிருந்து மீள்விக்கப்பட்டது