பக்கம்:நெய்தற் கன்னி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 ஒ. புலவர் கா. கோவிந்தன்

மனம், ஆங்கு வீசிய அப்புது மணத்தைக் காதலன் மாலை தரும் மணம் என்றே எண்ணிற்று; அவ்வளவே காதலன் மாலை வீசும் மணவாடை வந்து விட்டது; இன்னம் சிறிது பொழுதில் காதலனும் வந்து விடுவான் என எண்ணி மகிழ்ந்தாள். அந்நினைவால் தன்னை மறந்திருந்தவள் மேனியில், கடற் காற்று தண்ணென வந்து தாக்கிற்று. உடனே அவளுக்கு உண்மை புலனாகி விட்டது. சற்று முன் வீசிய மணம், மணவாளன் மார்பு மாலை தரும் மணம் அன்று; அது கடற்காற்றுப் பட்டு மலர்ந்த கழிப்பூக் களினின்றும் வந்த மணமாம் என அறிந்தாள்; உடனே உவகை மறைந்தது; உறுதுயர் கொண்டது உள்ளம்.

பிறிதொரு நாள்; கடல்போல் அகன்ற அவள் பெரிய மனையில், அலைபாயும் தன் உள்ளத்தை ஒரு வழியில் நிறுத்த மாட்டாது வருந்திக் கிடந்தாள்; அவள் நெஞ்சு அவனையே நினைந்து கொண்டிருந்தது. காதலனைக் கணப் பொழுது மறந்திருப்பதும் அதற்கு இயலவில்லை. அந்நிலையில் தொடர்ந்து பல நாள் உறக்கம் இன்மையால் உடலும், அவனையே உன்னி யுன்னி உறுதுயர். கொள்வதால் உள்ளமும் சோர்ந்து விட்டமையால், அவள் கண்கள் அவளை அறியாதே சிறிது அயர்ந்து விட்டன. உறக்கத்திலும் அவன் நினைவே தலை தூக்கி நின்றமையால், அச் சிறு பொழுதில், அவன் ஆங்கு வந்து அவளை ஆரத்தழுவிக் கொள்வது போலும் ஓர் உணர்வு பிறந்தது; உடனே, தன் தோள்மீது கிடப்பவனைத் தழுவிக் கொள்ள அவள் கைகள் ஆங்குச் சென்று தடவின. ஆனால், அந்தோ! ஆங்கு அவன் உடலைக் கண்டில அவள் கைகள்; அவ்வேமாற்றம் அவளுக்குப் பேரதிர்ச்சி அளித்தது; அவ்வளவே; கணப் பொழுது உறக்கமும் கலைந்து விட்டது; செயலற்றுச் சிந்தை நொந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/78&oldid=590155" இலிருந்து மீள்விக்கப்பட்டது