பக்கம்:நெய்தற் கன்னி.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 இ. புலவர் கா. கோவிந்தன்

பகற் காலத்திற்கு விடையளித்துவிட்டுக் காரிருள் பரவும் இரவிற்கு வரவேற்புக் கூறுகின்ற அம் மாலைக் காலம் கொடுமையே உருவாய்க் காட்சி அளித்தது.

இடும்பைக்கோர் இருப்பிடமாய் விளங்கிய அம் மாலைக் காலத்தில் கடற்கரை நோக்கிச் சென்றாள் ஒரு காரிகை. காதல் இன்பம் வாய்க்கப் பெறாமையால் கலங்கித் துயர் உறுபவள் அவள். அவளைக் கண்டு, அவளுக்குக் காதல் இன்பத்தின் சுவையை உணர்த்தி, அவள் உள்ளத்தில் காதற் கனலை மூட்டிவிட்ட அவள் காதலனைப் பார்த்துப் பல நாட்களாயின. அவன் அவளைக் காண வருவது நின்று விட்டது. அதனால் செய்வதறியாது சிந்தை நொந்திருந்த அவளை, அம்மாலைக் காட்சிகள் மேலும் வருத்தின. அவ் வருத்தம் சிறிதே மறந்திருக்க விரும்பியே அவள் கடல் நோக்கிச் சென்றாள். ஆனால், அந்தோ! ஆங்கும் அவளுக்குத் துன்பமே காத்துக் கிடந்தது. கண்ணெதிர் கண்ட அக் கருங்கடல், ஓயாது அலையெழுப்பி ஓ என இரைந்து கொண்டிருந்தது. அவ்வலையொலி, அவளுக்குக் காதலனை இழந்து வருந்தும் காரிகையரின் அழுகை யொலியை நினைவூட்டுவதாய் இருந்தது. அவ்வளவே; கடலை நோக்கினாள். ஏ. கடலே! ஓயாது எழுந்து ஒலித்து அழும் நின் அலை ஒலி, கடல் நாட்டுக் காவலனாய என் காதலன், நான் பற்றுக்கோடின்றிப் பாழுற்று வருந்தும் வண்ணம் வாராது போனானாக, அவனை நினைந்து நைந்துருகும் என் பொருட்டு இரங்கி நீ வருந்துவதால் எழுந்த அழுகை ஒலியோ? அல்லது, காதலன் கைவிட்டுப் போகக் கலங்கிக் கண்ணிர் சொரியும் என்போல், நீயும் காதலனை இழந்து கலங்குகின்றனையோ?” எனக் கேட்டுக் கலங்கினாள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெய்தற்_கன்னி.pdf/96&oldid=590173" இலிருந்து மீள்விக்கப்பட்டது