பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

89

வாங்கிக்கொண்ட அருணாசலம் ‘ஏய், ஒனக்கென்னடி அங்கே வேலை? இப்போ நீ வாறீயா, இல்ல அந்த சண்டாளியோடவே இருந்துக்கப் போறீயா? ரெண்டுல ஒண்ணு இப்பவே தெரியணும்’ என்று எச்சரித்தார்.

பகவதியம்மா, கணவரின் எச்சரிக்கையை காதில் வாங்காதவள்போல் பாவித்துக்கொண்டபோது, தமிழரசி, பெற்றவளை பிறப்பித்தவள் போல் பார்த்தாள். “என்னிடம் இவ்வளவு பாசம் வைத்திருக்கும் இந்த அம்மா, என்னைவிட அதிக நாட்கள் உறவாடி, எடுத்ததற்கெல்லாம் எடுபிடி வேலை செய்யும் இந்த கலாவதிபட்ட அடிகளையோ, பெற்ற அவமானத்தையோ, ஏன் ஒரு பொருட்டாக நினைக்கல? இவள் அம்மா இல்ல. தன் குஞ்சுக்கு இரைபோடுறதுக்காக கோழிக் குஞ்சைக் கொத்திக் கொண்டு போகும் கழுகு. கல் மனக்காரியின் பாசம் நாசத்தைக் கொடுக்கக் கூடியது...”

பகவதியம்மாவை, கணவர் மீண்டும் "வாறியா... இல்ல ஒரேயடியாய் நிக்கிறியா" என்று அதட்ட, அவளும் கலாவதியின் முன்னால் போய் நின்றபடி போதுமாடி... இப்பமாவது ஒன் மனசு குளிர்ந்துதாடி? சண்டாளி... கைகேயி...என்மவளுக்கு என்ன மருந்துடி போட்டு மயக்கினே? நான் பெத்தமவளையும், அந்த அப்பாவிப்பொண்ணு பொன்மணியை செய்தது மாதிரி செய்யாதடி. ஒன்னைக் கையெடுத்துக் கும்பிடுறேன். என்னைப் பார்த்தாடி மொறைக்கே. போலீஸ்காரங்க ரெண்டு தட்டு தட்டிட்டு, ஒன்னை விட்டுட்டாங்க பாரு. நீ இன்னும் முறைப்பே, இதுக்கு மேலேயும் முறைப்பே. சண்டாளி... அடுத்துக் கெடுத்த முண்ட..." என்று அர்ச்சித்தாள்.

தமிழரசிக்கு, எப்படிக் கோபம் வந்தது என்று தெரியவில்லை. அம்மாவின் முதுகைப் பிடித்துத் தள்ளி "போம்மா... தோ... ஒனக்காகக் காத்திருக்கார்... நான் ஒனக்கு மகள் இல்ல...போ...ஒன்னை மாதிரி கல்மனசுக்