பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

95

நகர்ந்து போன தமிழரசி, அவனையும் எப்படியோ பார்த்தாள். அவனும், முத்துலிங்கம் மாதிரி கத்தியிருந்தால், அவளுக்கு ஆவேசம் அதிகமாகியிருக்கலாம். ஆனால், அவனே தலையை நிமிர்த்தவில்லை. ஒரு தடவை மட்டும் தமிழரசியை ஏற்றமாகப் பார்த்துவிட்டுக் கண்களை இறங்கிக் கொண்டான். தமிழரசிக்கு என்னவோ போலிருந்தது. காரியங்கள் அவனை மீறி நடந்திருக்கலாம் என்றும் ஒரு எண்ணம் ஏற்பட்டது. அவன் எதுவும் பேசாமல் இருப்பதை, தனக்குக் காட்டும் சலுகையாக நினைத்தாள். காதலனை இழந்தாலும், காதலை இழக்காதவள் போல், அவனைத் தாபமாய் பார்த்தாள்.

இதற்குள், முத்துலிங்கம் சவாலிட்டார்.

"யார் வேண்டுமானாலும் எங்க வேணுமுன்னாலும் போகட்டும். எங்க குடும்பத்துக்கு அவமானம் உண்டு பண்ணுண்வங்களை போலீஸ் விட்டாலும், நாங்க விடப் போறதில்ல. எவ்வளவு பெரிய பொம்பிளயாய் இருந்தாலும் கவலயில்ல. சட்டப்படி பார்ப்போம், சரிப்பட்டு வராட்டால் என்ன வேணுமுன்னாலும் செய்வேன்...”

தமிழரசி, முத்துலிங்கத்தை நிமிர்ந்து பார்த்தாள். பயந்து போய் தன்மேல் சாய்ந்த கலாவதியின் தலையில் திரண்டு ஊறிப்போயிருந்த ரத்தக் கட்டியில் ஒரு துண்டு, தன் ஜாக்கெட்டில் பட்டிருப்பதைப் பார்த்தாள். ரத்த வெறியோ...நியாய வெறியோ-அவள் வெறி பிடித்தவளானாள்.

"கலாவதி... எட்டி நடடி... இன்னைக்கு ஒன்ன அடிச்சாங்க... நாளைக்கு என்ன செய்வாங்களோ? உம். புறப்படுங்க ...”*

தமிழரசியின் இரு புறமும் மாடக்கண்ணுவும், கலாவதியும் சூழ, தமிழரசி திரிசூலியாய் நடக்கப் போனாள். மகளிடம் வரப்போன பகவதியம்மா,