பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

நெருப்புத் தடயங்கள்

கூட்டத்துள் சிக்கிக் கொண்டாள். கூட்டத்தினர், அவளைக் கோபத்தில் நைப்பது தெரியாமல் நைத்துக் கொண்டிருந்தார்கள். கூட்டம் எதிர்த்துப் பேசி, போலீசாரையும், முத்துலிங்கத்தையும் பகைத்துக் கொள்ளும் அளவிற்கு வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும்,உள்ளூற வெப்பம் போல் உஷ்ணப்பட்டு நடந்தது. ஏதாவது செய்து நிலைமையை சமாளிக்கும்படி, சப்-இன்ஸ்பெக்டர், தாமோதரன் கையை அழுத்தினார். அவன் சொன்னால் தமிழரசி கேட்பாள் என்பது, அவள் அவனைப் பார்த்த விதத்திலேயே அவருக்குப் புரிந்துவிட்டது. தாமோதரன் கைகளை மீண்டும் அழுத்தி "பிளிஸ்.டூ... சம்திங்’ என்றார்.

ஆனால்---

தாமோதரனோ தலையை நிமிர்த்தாமல், கண்களை உயர்த்தாமல், தரையையே பார்த்துக் கொண்டு நின்றான். தமிழரசி முன்னால் நடக்க, கூட்டம் முரண்படாமல் அவள் பின்னால் நடந்தது.

10

தாமோதரனைக் கடக்கிறோம் என்ற உணர்வோடு நடந்தாலும் அவனை ஏறிட்டு நோக்காமல், நெஞ்சின் இடது பகுதியை அழுத்திப் பிடித்தபடி, மூச்சை அடக்கி, முன் நெற்றியைச் சுருக்கி, 'படுகளத்தில் ஒப்பாரி கூடாது” என்ற பழமொழியை மனதுக்குள் சொல்லியபடி நடந்தாள் தமிழரசி. தாமுவும் கைகளை குறுக்காக வைத்தபடி தரையில் இருந்து கண் பிறழாமல், தலையைப் புரட்டாமல் நின்று கொண்டிருந்தான். அவ்வளவு பெரிய சபதம் போட்ட தமிழரசியின் அப்பா, அ ண் ண னு ட ன் சேர்ந்து மோவாயில் கை வைத்தபடி நின்றிருந்தார்.