பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

97

தமிழரசியின் வலது பக்கமாக வந்த கலாவதி, தாமோதரனைப் பார்த்தாள். அவனுக்கும் இந்த நிகழ்ச்சிகளுக்கும் சம்பந்தம் இருக்காது என்ற எண்ணமா, இருக்கக் கூடாது என்ற ஆவலோ, எதுவென்று தெரியவில்லை. அவன் நின்ற கோலத்தைப் பார்த்ததும் ஈரக்காயங்களைச் சுமந்த அவள் நெஞ்சும் ஈரமாகியது. கிணற்று மேட்டில், அவன் தமிழோடு காதல் பேச்சுப் பேசியது; தன்னையும் மரியாதையுடன் சரிக்குச் சமமாக நோக்கியது; அவர்களுக்காக, தான் பதநீரும், நொங்கும் கொண்டு வந்து கொடுத்தது அத்தனையும் அவள் நெஞ்சுள் கசிந்து நீர்ப்பிரவாகமாக ஊற்றெடுத்தது. தன் ஒருத்திக்காக தன்னையே அவனிடம் இன்னெருத்தியாகக் காட்டிக் கொள்ளும் தமிழரசியை பயபக்தியுடன் பார்த்தாள். அவளை அறியாமலே அவளுள் ஒரு முடிவு ஏற்பட்டது. அடிபட்ட அந்த உடம்பிற்குள் பூகம்பம் வெடிப்பதுபோல் கத்தினாள்.

“நான் வர்ல. நான் வர்ல. எப்பா, நில்லும். நாங்க வர்ல...”

நடக்காமல், முரண்டு பிடித்து நின்ற கலாவதியை, தமிழரசி, ஆச்சரியமாகப் பார்த்தாள். பிறகு, தாமோதரனுக்குச் சொல்வதுபோல், “நான் மட்டும்... சந்தோஷப்பட்டா நடக்கேன். இனிமேல் எது நடக்கணுமோ அது நடக்கட்டும். இதுவரைக்கும் நான் பேசினது ஒனக்காக. இனிமே பேசப்போறது, போலீஸ் கையில் அகப்பட்ட ஒரு ஏழைப் பெண்ணைப் பற்றி. இப்போ நீயும் ஒனக்காக நடக்கல. குறைந்தபட்சம் இந்த ஊர்ல, ஒன்னை மாதிரி ஒருநிலமை, இன்னொரு பெண்ணுக்கு ஏற்படக்கூடாதுன்னு தான். நீ நடக்கிறே...உ.ம்...நட கலா...” என்றாள். -

கலாவதி, வாய்விட்டு அலறிஞள். தமிழரசியின் கழுத்தில், தன் கரங்களைச் சுற்றிக் கொண்டு, அவள் மார்பில் தலை வைத்து மண்ணதிர, மானுடப் பார்வைகள் அதிர வீறிட்டாள்.

நெ - 7