பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

99

புரியாமல், அப்பாவித்தனமாக நின்ற சித்தப்பாவைப் பார்த்தாள். அத்தனை பேரையும், ஒட்டு மொத்தமாகப் பார்த்தாள். பிறகு, இன்னும் குனிந்த தலை நிமிர்த்தாமல் நின்ற தாமோதரனைப் பார்த்தாள். பார்க்கப் பார்க்கச் சிவந்தாள். சிவக்கச் சிவக்க வெடித்தாள்:

“பார்த்தீங்களா மிஸ்டர் தாமோதரன், இயேசுநாதர் சிலுவையில் ரத்தம் சிந்துனது மாதிரி சிந்தினாலும், அந்த பாதிப்பு இல்லாமலே இவள் பேசுறதை? ஒங்க காதுல விழுந்துதா? இந்த அப்பாவிப் பொண்ணே அடிக்க வச்சு, வேடிக்கை பார்க்கிற ஒங்களுக்கு, வருத்தம் தெரிவிக்கிற நாகரிகம் கூட இல்ல. தான் சிந்தின. ரத்தத்தைக்கூட தண்ணீர் மாதிரி நினைக்கிறாள். நீங்களோ, இதெல்லாம் தண்ணிப்பட்டபாடு என்கிறது மாதிரி நிக்கிறீங்க. போகட்டும். நீங்க வருத்தம் தெரிவிக்கிறதுனால நடந்தது மறைஞ்சுடப் போறதில்ல. எப்படியோ ஒழியட்டும். நான் ஒங்ககிட்ட கேட்கப் போறது ஒன்றே ஒன்றுதான். இவளே சித்ரவதை செய்ததை இதோட நிறுத்தப் போறீங்களா, இல்ல ஒருபடி முன்னேறப் போறீங்களா? சொல்லுங்க மிஸ்டர் தாமோதரன். கேட்கிறது தமிழரசியில்ல; ஒரு பெண்ணோட கஷ்டத்தைத் தாங்க முடியாத இன்னொரு பெண்...”

தாமோதரன், தலையைக் குலுக்கி, கலாவதியை உற்றுப் பார்த்தான். அவள் காயங்களைப் பார்த்தோ, இல்லை அவள் காய்தல்.உவத்தல் இன்றி நின்றதாலோ, அவன் அவளையே பார்த்தபடி நின்றான். அவன் தோள்கள் குலுங்கின. மெள்ள மெள்ள, பூமிப் பார்வையை ஆகாயமாக்கி, தமிழரசியைப் பார்த்தான். பிறகு, எந்த வேகத்தில் பார்த்தானோ, அந்த வேகத்திலேயே, அவளிடமிருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு, தன் பாட்டுக்குப் பேசுபவன் போல ஒப்புவித்தான்.