பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

நெருப்புத் தடயங்கள்

“இங்கே நடந்தது எல்லாமே துரதிருஷ்டமானது. இது தெரிஞ்சால், நான் ஊருக்கே வந்திருக்க மாட்டேன். நான் ஊர்ல வந்ததுல இருந்து, என் வரையில் நடந்த எதுவும் நடக்காமல் இருந்திருந்தால் நான் எவ்வளவோ சந்தோஷப்பட்டிருப்பேன். என்னமோ... எப்படியோ நடந்துட்டு... ஐ ஆம் ஸாரி... இனிமேல் என்னால யாருக்கும் எந்தப் பிரச்சனையும் வராது. கலாவதி நிசமாவே பெரிய மனுஷி.”

தாமோதரன், கலாவதியையே மீண்டும் பார்த்தான். பிறகு போகிற போக்கில் தமிழரசியையும் பார்த்துவிட்டு வேகமாக வெளியேறி விட்டான். அவனைப் பிடித்துக் கொண்டு வருவதற்காக, முத்துலிங்கமும் வெளியே ஒடினார். போலீஸ் படையினரும், சுற்றுப்புறச்சூழலை, குறுக்கும் நெடுக்குமாகப் பார்த்து விட்டு, வெளியேறியது.

மாடக்கண்ணுவின் வீட்டிலிருந்து, தெருவுக்கு வந்த அனைவரும், கும்பல் கும்பலாக நின்றார்கள். இதற்குள், ஜீப்பில் முன்னிருக்கையில் ஏறிய சப்-இன்ஸ்பெக்டரிடம், முத்துலிங்கம் வினயமாகப் பேசினார். அவரது கையைப் பிடித்து, இறங்கும்படி இழுத்தார். ஆனால், அவரோ பலமாக தலையை ஆட்டிவிட்டு டிரைவரைப் பார்த்தார். ஜீப் பாய்ந்தது. அதன் பின்னால் நான்கைந்து சிறுவர்கள் ஒடி, கல்லையும், மண்ணையும் வாரியிறைத்தார்கள். முனையில் திரும்பப் போன ஜீப்பை தங்களைப் பார்த்துதான் திரும்புகிறது என்று அனுமானித்து, ஒடினார்கள். கூட்டத்தில் நின்ற ஒருவர் “ஏல பசங்களா, வெளியூர்க்காரன் சைக்கிள் டயர்கள பஞ்சராக்குறது மாதிரி, ஜீப்பில காற்ற புடுங்கி விடாண்டாம்? என்ன பையங்கடா...” என்றார். உடனே ஒரு சிறுவன் “அவ்வளவுதான்... அப்புறம் வெளில போக முடியாம...நேரம் போறதுக்காக... இங்கேயே போறவன்...வாரவனை எல்லாம் அடிப்பாங்க” என்று, தன்னை புத்தியுள்ள பயந்தாங் கொள்ளிப் பையனாகக் காட்டிக் கொண்டான்.