பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

101

கூட்டத்தில் கிசுகிசுக்கள், முணுமுணுப்புகளாகி வார்த்தை பிரளயங்களாக வெடித்தன. ஆயிரந்தான் இருந்தாலும்... நம்ம ஊரு பொண்ண...போலீச வச்சு அடிச்சால் என்னய்யா அர்த்தம்” என்ற கேள்விகள்; “இவ்வளவு நேரமும் சும்மா இருந்துட்டு, இப்போ பேசினால் என்னவே அர்த்தம்” என்ற எதிர்க் கேள்விகள். “நம்ம ஊர்ப் பையங்க பெரிய வேலைக்குப் போனால், ஊரைத்தான் குட்டப் புழுதியாக்குவாங்க என்கிறது தெரிஞ்ச கதை தானே” என்ற வியாக்கியானங்கள். ராஜதுரைக்கும், அருணாசலத்திற்கும் இடையே ஒடுங்கிப் போய் நின்ற முத்துலிங்கம், கூடிக் கூடிப் பேசிய கும்பல்களை முறைத்தார். அவர்களோ, அந்த மூவரையும், ஊரின் கால, தூத, எமனாக நினைத்து, சிறிது பேச்சில் பின்வாங்கினார்கள். பிறகு, தமிழரசியின் தைரியத்தை நினைத்தபடி, பேச்சில் முன்வாங்கினர்கள். இதைத் தாக்குப் பிடிக்க முடியாத அந்த மூவரும், பொடி நடையாக நடக்கத் துவங்கினார்கள்.

பைத்தியாரத் தர்மரின் வீட்டிற்குள் மொய்த்து நின்ற கூட்டம், சிறிது சிறிதாக விலகிக் கொண்டிருந்தது. “பாவிப்பயலுவ...கரிமுடிவான் மவனுவ...எப்டி அடிச்சிருக்காங்க...” என்று அச்சத்துடன் அலுத்துக் கொண்ட தாய்மார்கள்; தமிழரசி அங்கே நடமாடிய இடத்திற்கெல்லாம் சென்று, அவளை ஆச்சரியமாகப் பார்த்த சிறுவர், சிறுமியர்கள்-அத்தனை பேரும் அகன்றார்கள். “நல்ல வேள! கடவுளாப் பார்த்து என் தங்கம்... தமிழரசியை அனுப்பியிருக்காரு. இல்லன்னா... மாடக் கண்ணு மச்சானும், கலாவதியும் போன இடம் புல்லு முளைச்சிருக்கும்” என்றாள் முத்துமாரிப்பாட்டி, தனது அடிபட்ட அங்கங்களைத் தடவியபடியே. இன்னொரு பெண், தமிழரசியை, வாயகலப் பார்த்தபடி “ஆமாம்...தமிளு. போலீஸ்காரங்கள அப்படிப் பேசுனியே, ஒனக்கு பயமாய் இல்லே? அவங்க அடிச்சால் என்ன பண்ணுவே? நான் மனசுக்குள்ளேயே அவங்கள திட்டுனேன். அப்போகூட