பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

நெருப்புத் தடயங்கள்

பயம். அது தெரிஞ்சு, அவங்க என்னை அடிச்சிடுவாங்களோன்னு மனசு படக்படக்குன்னு அடிச்சிக்கிட்டு” என்றாள்.

தமிழரசி, தன்மானத்தை விலையாகக் கொடுத்து, சுதந்திரத்தை அனுபவிக்கும் அந்த மானுட ஜீவிகளைப் பார்த்து, வெறுமையாகப் புன்னகைத்தாள். அப்போதுதான் மேடைப் பேச்சிற்கும், ஊர் நிலைமைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை, முழுமையாகப் புரிந்து கொண்டாள். ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்று அவளே பேசியிருக்கிறாள். ஆனால், அதோ அந்த அப்பாவித் தர்மர், தான் வாங்கிக் கொடுத்த ஜரிகை வேட்டி, தும்பு தும்பாக, ராமபாணம் துளைத்த ராவணன்போல், லத்திக் கம்புகளின் குத்துக்களாலும் குடைச்சல்களாலும் நார்க் கட்டிலில் சோர்ந்து கிடக்கிறார். ‘தாய்க்குலம்...புதுமைப் பெண்...பெண் விடுதலை’ என்று அரசாங்க போஸ்டர்களில் இருந்து, ‘ஆண்டிகள்’ அடிக்கும் போஸ்டர்கள் வரை பீற்றிக் கொள்ளும் இதே இந்தக் காலத்தில்தான், இந்தக் கலாவதிப் பெண் கிழிந்த ஜாக்கெட்டை பிய்த்துக் கொண்டு, பீறிடும் பிறண்ட சதையை வெறுமையோடு பார்த்துக்கொள்கிறாள்! சமுதாயக் கொடுமைகளைப் பற்றிப் பேசாமல், ‘ராமாயணம் சிறந்ததா...பாரதமா’ என்று பேசுபவர்களைத் தூக்கில்போட வேண்டும்! முஸோலினிையப் போட்டது போல், போடவேண்டும்!

கூட்டம் போய்விட்டது.

முத்துமாரிப் பாட்டி, மாட்டுச் சாணத்தைச் சுட வைத்து, அதை ஒரு கந்தல் துணியில் போட்டு, குப்புறப்படுத்துக் கிடந்த மாடக்கண்ணுவை நெருங்கினாள். அவர் உடம்பெங்கும் ஒத்தடம் கொடுத்தாள். அடிபட்ட தனது கைக்கும், காலுக்கும் ஒத்தடம் கொடுத்துக் கொண்டாள். கலாவதிக்கு ஒத்தடம் கொடுத்த போது, அவள் வலியின் வலிமைக்குள் சிக்கி, வாய்விட்டுக் கத்தினாள்.