பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

நெருப்புத் தடயங்கள்

“ஒங்கம்மா சாப்பிடக் கூப்பிட்டாங்க...”

“அவங்களுக்கு நான் மகள் இல்லன்னு சொல்லு. போ... போடா...”

சிறிதுநேரம், தன் பங்கிற்காகவும் காத்து நின்ற சிறுவன் போய்விட்டான். தமிழரசியால் தூங்க முடிய வில்லை. அப்பாவும், அண்ணனும், தனக்கு எதுவும் நேர்ந்து விடக் கூடாது என்பதற்காக, வெளியே காத்து நின்றது அவளுக்கு நினைவுக்கு வந்தது. அம்மாவை, கூட்டத்தில், அப்படித் தள்ளியிருக்க வேண்டாமென்றும் தோன்றியது. எப்படியோ... இப்போ நடந்ததைப் பார்த்தால், என் வாழ்க்கையில் என்ன நடக்கப் போவுதுன்னு தெரியல... எது வேண்டுமானலும் நடக்கட்டும்.

உச்சக்கட்ட துக்கத்தாலும், சோர்வாலும் மீண்டும் கண்ணயரப் போன தமிழரசி, நிமிர்ந்து உட்கார்ந்தாள். அம்மா, ராகமில்லாத நிச ஒப்பாரி போடுவது கேட்டது. கல்லூரி விடுதிக்குள், தன் குட்டியை குரங்காட்டியிடம் பறிகொடுத்த ஒரு பெண் குரங்கு கத்தியதே, அதே மாதிரியான அவல ஒலி. பாசம் என்று வந்து விட்டால், பெண் புலியும், மான் போல் மருளும் என்பதை எடுத்துக்காட்டும் ஏக்க ஏக்கமான விம்மல்கள். துக்கம் துக்கமான ஒலி...

தமிழரசி, பாய்ந்து நனாடந்தாள். அம்மாவைப் பார்க்காத ஒவ்வொரு வினாடியும், வீண் வினாடி என்று நினைத்தவள் போல், தெருவுக்கு வந்து, தன் வீட்டுக்குள் வந்தாள். அவள் முற்றத்திற்கு வரும் முன்பே, அம்மாக்காரி ஓடிவந்து அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். “நான் கலாவதியை திட்டி அழ வைக்க மாட்டேம்மா... என்கிட்டேயே இரும்மா” என்று அவள் பாசத்துள் கரைந்து, தமிழரசியை தன் கர்ப்பப்பைக்குள் மீண்டும் வைக்கப் போகிறவள் போல், அழுத்திப் பிடித்தாள். ‘ஏய்’ என்ற குரல் கேட்டு, இருவரும் நிமிர்ந்தார்கள்.