பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

105

வெளியே இருந்து வந்த தமிழரசியின் தந்தை அருணாசலம், மகள் மேல் பாயப் போனார். வார்த்தைகள் வேகமாகவும், அவர் மகளைப் பார்த்து ஓடியது, அதிவேகமாகவும் இருந்தன.

“நீ என் மகள் இல்லன்னு காலையிலேயே தலைமுழுவிட்டேன். என் வீட்டுக்குள்ளே நீ எப்டி வரலாம்? சண்டாளி. ஒன்னை என் கையாலயே வெட்டி, இங்கேயே குழிவெட்டிப் புதைக்கப் போறேன், பாரு.”

11

ஒரு நாளும் தன்னை அதிர்ந்துகூட பேசாத தந்தை, இப்போது அதற்கு மானநஷ்ட ஈடு கேட்பது போல், ‘அடித்து’ப் பேச முற்படுவதைப் பார்த்த தமிழரசி, முதலில் துக்கித்தும், விக்கித்தும் நின்றாள். பகவதியம்மாள் கணவனை பல வந்தமாகப் பிடித்துக் கொண்டாள். அப்படியும் அருணசலம் அவள் பிடியில் இருந்து அத்துமீறி மகளை நோக்கிப் பாய்ந்தார். அவர் கைகள், அவள் கண்களை குத்துமளவிற்கு நீண்டன. அவரது வலது கை, அவளின் இடது காதுப் பக்கமும், இடது கரம், வலது கண்ணின் பக்கமும் நீண்டன. தமிழரசி, அனிச்சையாகக் கூட கண்களைச் சொருகி, முகத்தை மூடி, தலையைக் கேடய மாக்காமல் அப்படியே நின்றாள். வீரன் என்பவனுக்கு இலக்கணம், அவனை நோக்கி போர்க்களத்தில் எதிரிகள் ஈட்டிகளை எறியும்போதும், அவன் கண்கள் இமைக்காமல் இருக்கவேண்டும் என்ற பொருள் சுமந்த புறநானூறு பாடல் ஒன்றைப் போதித்ததால் ஏற்பட்ட பாதிப்போ அல்லது நியாயத்தை விற்கப் புகுந்தால், அதற்குப் பதிலாக அநியாயங்களை வாங்கித் தான் ஆகவேண்டும் என்ற மனத்தெளிவோ, என்னவோ தெரியவில்லை,