பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

107

போறேன். தோ பாருடி, நாம் பெத்த பிள்ள எப்படி கலங்கி இருக்கான்னு” என்றார்.

வராண்டாவில் நாற்காலியில் படுத்துக் கிடப்பது போல் சுருண்டு கிடந்தான் ராஜதுரை. கண்கள் மூடிக் கிடந்தன. கைகள் சோர்ந்து கிடந்தன. தலை தொங்கிக் கிடந்தது. மகனைப் பார்க்கப் பார்க்க பகவதியம்மாவின் பெற்ற வயிறு பற்றியது. “அடி ராட்சஸி! ஒண்ணனோட கோலத்தை இங்கே வந்து பாருடி ஒன்னால அவன் இடி விழுந்து கிடக்கதைப் பாருடி...” என்று கூவினாள். ராஜதுரை, கண்களைத் திறக்காமலே “நீ சும்மா இரும்மா. நம்ம அண்ணனும், எச்சிக் கஞ்சி குடிக்கிற வினைதீர்த்தான் பயலும் ஒரே வீட்ல சம்பந்தம் எடுத்து, ஒரே இலையில சாப்பிட முடியுமான்னு, இவ்வளவு படிச்சும் அவளுக்குத் தெரியல. எல்லாம் என் தலைவிதி. விட்டுத்தள்ளு” என்றான்.

உள்ளே நின்ற தமிழரசியால் பொறுக்க முடியவில்லை. மடமடவென்று வெளியே வந்து அண்ணன் முன்னால் நின்றாள். அவன் படுத்திருந்த கோலத்தைப் பார்த்ததும் துடித்துப் போனாள். கீழே குனிந்து, உட்கார்ந்து, ராஜ துரையின் முகத்தை நிமிர்த்தி, “என்னண்ணா நீ! அப்பாம்மாதான் வயசான காலத்தை சேர்ந்தவங்க. நீயுமா? நம்ம தாத்தாவும், வினைதீர்த்தான் தாத்தாவும் ஒரே ஆளாய் இருந்தபோது, ஒன்னோட பாட்டியும், அவனோட பாட்டியும் ஒரே பெண்ணானபோது, நீ அவன் கூட ஒரே இலையில சாப்பிடுறதுல என்ன தப்பு? ராம பிரான் குரங்கு இனத்தைச் சேர்ந்த அனுமாளுேடேயே ஒரே இலையில் சாப்பிட்டவரு. நீ அப்படிப்பட்ட ராமசாமி கோவில் கணக்கை எழுதிக்கிட்டே, இப்படிப்பட்ட பேச்சை பேசுறே பாரு...” என்றாள். அவள் பேச்சில் ஆத்திரத்தை விட அன்பு அதிகமாய் இருந்ததால், ராஜதுரை, அதன் அர்த்தத்திற்குள் போகாமல், தங்கையின் கைக்குள்ளேயே தன் முகத்தை மறைத்துக் கொண்டான் அருணசலம்.