பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

நெருப்புத் தடயங்கள்

நிறுத்தவில்லை. தடுமாறிப் போன தமிழரசி தன்பாட்டுக்கு தரையையே பார்த்தபடி பேசினாள்:

“ஆயிரம் நடந்திருக்கலாம். அதுக்காக ஆயிரங்காலத்துப் பயிரான இந்தக் கல்யாணத்தை நிறுத்தக் கூடாது. கல்யாணத்துக்கு நான்தான் இடைஞ்சல்னா,இந்த ஊரை விட்டு, என் குடும்பத்தைவிட்டு, ஒரேயடியாய் விலகிப் போக தயாராய் இருக்கேன். எங்கண்ணனையும், ஒங்க தங்கையையும் விலக்கிடப்படாது. முத்துலிங்கம் அத்தான் கிட்டே சொல்லிட்டுப் போகலாமுன்னு வந்தேன்...!”

முத்துலிங்கம், காகிதத்தில் எழுத்துகள் தப்புத் தப்பாக வந்ததாலோ என்னவோ அதை கையால் கசக்கிக் கிழித்துவிட்டு வேறொரு காகிதத்தை எடுத்தார். பிறகு, தமிழரசியை கண்களால் எரித்தபடியே பதிலளித்தார்:

“ஒன்னைப்பற்றி எனக்குத் தெரியும், இன்னும் எங்களை எப்டில்லாம் அவமானப் படுத்தணுமுன்னு நினைக்கிறியோ? நீ இப்போ, அண்ணனுக்குப் பெண் கேட்டு வரல; ஒனக்கு மாப்பிள்ளே தேடி வந்திருக்கே. என் தங்கச்சியை கடத்துனது மாதிரி, இதோ இவனையும் கடத்த வந்திருக்கே. என்ன ஜெகசாலம் போட்டாலும் சரி, நீ செய்திருக்கிற அக்கிரமத்துக்கும், என் தங்கச்சியை கடத்துனதுக்கும்... ஒன்னை சும்மா விட்டுடுவேன்னு மட்டும் நினைக்காதே. மானம் இருந்தால் இதுக்குமேல இங்கே நிற்க மாட்டே...”

தமிழரசி ஒடுங்கிப்போய் நின்றபோது, அடுப்படியில் இருந்து கனகம் கர்ஜித்தாள்:

“ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவாம், உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்”. ஆம்புளயப் பார்க்க ஆசப்பட்டு, வீடு தேடி வாரதை விட, தூக்குப் போட்டுச் சாகலாம். ஏய் விஜயா, நான் ஒன்னையாடி வைதேன்?