பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமூத்திரம்

113

நீ ஏண்டி அழுகிறே? ராஜதுரையை மறக்க முடியாட்டால், வேணுமுன்னால் இவள் கூடவே போய், அவன் கிட்ட சேர்ந்துக்கிறியா? துா... குடி கெடுப்பாள்! எந்த நேரத்துல மெட்ராஸ்ல இருந்து இந்த ஊருக்குள்ள காலடி வச்சாளோ, ஊரே ஆடிப் போச்சு!”

தமிழரசி சமையலறைப் பக்கம் திரும்பினாள். கனகம் எதையோ ஒன்றை சட்டியில் தாளித்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தாள். அந்தப் பேச்சைக் கேட்கக் கேட்க மூளையோடு சேர்ந்து, உடம்பே குழம்பியதுபோல் நின்ற தமிழரசி, மீண்டும் சுயமரியாதைக்காரியானாள். தாமோதரனைப் பார்த்தாள். அவனே எதுவும் நடக்காதது போல் இன்னும் சூட்கேசோடு போராடிக் கொண்டிருந்தான்.

தமிழரசி தலை நிமிர்ந்தாள். தன்னளவில் தன் மானத்தையே கூலியாகக் கொடுத்துச் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்ட திருப்தி. ஒரு பெண்ணின் கவுரவத்தைக் காப்பாற்றுவதற்கு இரண்டாவது தடவையாக தவறியவன் ஆண் மகனே இல்லை. அப்புறம் அவன் எப்படிக் காதலனாக இருக்க முடியும் என்பதைக் கண்டுபிடித்து விட்ட அதிருப்திகரமான திருப்தி-சுயமரியாதைக்கு வழி விட்டு, காதலை தேய்பிறையாக்கிய எண்ணக் கம்பீரம்...

தமிழரசி நடந்தாள். சமையலறைக்குள் இன்னும் சுவரில் தலைபட, கண்களில் நீர்பட, காதோரம் அதன் கறைபட, உடைந்த வளையல் துண்டு ஒன்றை கழுத்தில் குத்தியபடியே இருந்த விஜயாவைப் பார்த்தாள். அவளோ, அண்ணியை ஜாடையாகப் பார்த்துவிட்டு, தலைக்குமேல் கரங்களைக் கொண்டுபோய் தமிழரசியை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டாள். தமிழு! இந்தக் கும்புடுக்கு ஒனக்கு அர்த்தம் தெரியுமா? எங்க அண்ணி கனகம் இந்தச் சாக்குல என்னை அவளோட குடிகாரன் தம்பிக்கு பலியாக்க நினைக்கிறாள். ராஜதுரை மச்சானை நினைச்ச இந்த மனசு,

நெ.-8