பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

117

‘இந்த தாமோதரன், ஒரு அபலைப்பெண்ணையும், அவள் தந்தையையும், உத்தியோக பலத்தை வைத்துத் தாக்கிய மனிதர். என்னை, அவர் வீட்டார் இழிவு செய்தபோதும், ஒப்புக்குக் கூட தலையிடாத மனிதர். அப்படி இருந்தும், அவரை மறக்க முடியவில்லையே. அவர் செய்த அல்லது செய்யத் தவறிய ஒவ்வொரு காரியத்திற்கும், என் மனம் ஏன் வக்காலத்து வாங்குகிறது? இந்த நினைப்பிற்குப் பேரென்ன? ‘காதலுக்கு, கொடுக்கத்தான் தெரியும்; வாங்கத் தெரியாது’ என்று சொல்வது இதனால்தானோ...’

தமிழரசிக்கு, தான் படித்த-மாணவிகளுக்குப் பயிற்றுவித்த, ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான, மணிமேகலை நினைவுக்கு வந்தது. அந்த மாதவிக் குட்டியை, அரசகுமாரனான உதயகுமாரன், ஆணவத்தாலும், அளவற்ற காதலாலும் உவவனத்தில் கைப்பற்றப் போகிருன். அவனுக்குப் பயந்து ஒளிந்து கொண்ட மணிமேகலையோ, அவன் போனதும் புதியோண்பிள்ளை போனது என் நெஞ்சே... ஈதோ அன்றய’ என்று காதல் சிலிர்க்கப் புலம்புகிறாள்!

அந்த நிலைதான் என்றன் நிலை. இந்த மணிமேகலை, பெண்மையாலும், சக்தி வீரியத்தாலும், பாத்திரப் படைப்பாலும், கண்ணகியைவிடப் பெரிதும் வளர்ந்தவள். தமிழ் இலக்கியத்தில், பாட்டாளி வர்க்கப் படைப்பாலும், அவர்களுள் ஒருவராய் வாழ்ந்த நெறியாலும், எந்த எழுத்தாளனும் தொடாத இலக்கியச் சிகரத்தை தொட்ட வீச்சாலும், தக்காரும் மிக்காரும் இல்லாத தனிப்பொருள் படைப்பாளியான விந்தன், திறனாய்வாளர்களாலும், முட்டாள் வாசகப் பரப்பாலும், ‘அமுக்கப்பட்டதுபோல்’ இந்த மணிமேகலையையும், இலக்கியப் பேச்சாளர்கள் அமுக்கி விட்டார்கள். இவளின் பாத்திரப் படைப்பை, கண்ணகிதாசர்களுக்கு முதலில் விளக்கியாக வேண்டும்...!