பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

நெருப்புத் தடயங்கள்

தமிழரசி, சிந்தனையில் இருந்து கலைந்து செயல்பட்டாள். மனதுள் இருந்த எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக எடுத்து வெளியே போடுவதுபோல், சூட்கேஸிற்குள் எல்லாத்துணிகளையும் எறிந்தாள். பின்னர் சூட்கேஸும் கையுமாக முற்றத்திற்கு வந்தாள். அப்பாவையும் அம்மாவையும், அண்ணனையும் ஒட்டு மொத்தமாகவும், தனித் தனியாகவும் பார்த்தாள். பார்த்துக் கொண்டே நின்றாள்.

இதோ இந்த இடம், அவள் தந்தையும், தாயும் கொஞ்சிக்குலாவி அவளைப் பிறப்பித்த இடம். பள்ளிக் காலத்திலேயே, தாமோதரன் நினைப்போடு வலம் வந்த பூமி. அண்ணன் ராஜதுரையுடன் ரயில் விளையாட்டும், கலாவதியுடன் கிளித்தட்டும் ஆடிய வீடு. இனிமேல், இந்த வீட்டிற்கு, என்னால் வர முடியுமோ முடியாதோ? எப்படியோ, நான் இந்த வீட்டில் இருந்து போனால்தான் ஒருவேளை ராஜதுரையோடு வாழ்க்கை நடத்த விஜயா வர முடியும்.

சூட்கேஸை கையில் தூக்கியபடி, தன்னையே தாபமாகப் பார்த்த தமிழரசியை, அவள் அம்மா பகவதியம்மா, மலங்க மலங்கப் பார்த்தாள். பிறகு கையை தரையில் ஊன்றி எழுந்திருக்கப் போனாள்.

அது முடியாமல் போகவே “போடி, போ! வெனை தீர்த்தான் பயல் வீட்டுக்கா போறே? பெத்துப் போட்டவளை விட்டுட்டு, வெத்து வேட்டுக்காரிக்கிட்டேயே போறியா? போ. என் இழவுக்காவது வந்து தலையைக் காட்டு. ஒன்னை சொல்லி குற்றமில்லடி அந்தப் பாவி முண்டை, பச்சிலை தட்டியிருக்காள். நீ எங்கே இருந்தாலும் நான்தாண்டி ஒனக்குத் தாய்! இதை எந்த பச்சிலையாலும் மாற்ற முடியாது” என்று புலம்பினாள்.

தமிழரசி ஒடிப்போய், அம்மாவின் முகத்தை நிமிர்த்தினாள். பிறகு, அவளோடு அவளாக உட்கார்ந்தபடியே அம்மாவை கட்டியணைத்துக் கூவினாள்.